ராஜீவ் கொலை வழக்கில் மீண்டும் விடுதலைப் புலிகளை கோர்த்துவிடும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்! வெடித்தது சர்ச்சை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி பாக்கியராசன்.சே. பதிவு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான பாக்கியராசன் சே. என்பவர் தமது ட்விட்டர் பக்கத்தில் மூத்த வழக்கறிஞர் நடராஜன் மறைவு குறித்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில்

“ராஜீவ்காந்தி இறந்த வழக்கில் உலகிலேயே அதுவரை வழங்கப்படாத தீர்ப்பாக 26 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்குத்தண்டனை வழங்கிய அந்நேரத்தில், மேல் முறையீடு செய்ய ஐயா பழ.நெடுமாறன் மற்றும் மூத்தவர் தடா சந்திரசேகர் உள்ளிட்டோர் பலரிடம் கேட்டும் ஒருவரும் வழக்காட முன்வராத பொழுது, விடுதலைப்புலிகளின் வழக்கு என்று தெரிந்தும் பல நெருக்கடிகளையும் மீறி துணிந்து ஆஜராகி பல ஆதாரங்களையும் சட்டநுணக்கங்களையும் எடுத்து வைத்து வாதாடி 19 பேரை விடுதலை செய்ய காரணமான மகத்தான மனிதர்.

பலருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்திருக்கிற N.நடராசன் அவர்களுக்கு புகழ் வணக்கம்” என பதிவு செய்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விடுதலைப் புலிகள் பொறுப்பேற்று நடத்தியது போல பாக்கியராசன் பதிவு செய்திருப்பதுதான் சர்ச்சையாகி இருக்கிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப் புலிகளும் கைது செய்யப்பட்டிருந்தாலும் அந்த இயக்கம் ஒருபோதும் இந்த வழக்கு விசாரணையில் தலையிட்டதும் இல்லை. உதவியதும் இல்லை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 தமிழருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது பழ.நெடுமாறன் தலைமையில் பல்வேறு கட்சிகள், இயக்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு நிதி திரட்டிதான் வழக்குகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Contact Us