குடும்பஸ்தர் மீது வன்முறைத் தாக்குதல்- காவல்துறையினருக்கு எதிராக திரண்ட மக்களால் அமைதியின்மை!

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சி கோரக்கன் காட்டுப் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் மீது கார் ஒன்றில் வந்த குழுவினர் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டு தப்பிச் சென்றிருந்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்யவில்லை என கண்டித்து இன்றைய தினம் கோரக்கன்கட்டு கிராம அலுவலர் அலுவலகம் முன்பாக ஒன்று திரண்ட மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதால் அமைதியின்மை ஏற்பட்டது.

இந்த வாள் வெட்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு இன்று பகல் வருகை தந்த கிளிநொச்சி காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், இரண்டு சந்தேக நபர்களையும், அவர்கள் பயன்படுத்தியதாக கருதப்படும் கார் ஒன்றினையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.

ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கு தாங்கள் உடனடி நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்ததை அடுத்து எதிர்ப்பில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

Contact Us