பாய்ந்து வந்த லொறி மீது இளைஞரை தள்ளிவிட்ட நபர்: கனடாவில் சம்பவம்

கனடாவின் வின்னிபெக் நகரில் பாய்ந்து வந்த லொறி மீது இளைஞரை தள்ளிவிட்ட விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர். வின்னிபெக் நகரில் கடந்த 8ம் திகதி குறித்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி சுமார் 3.40 மணியளவில் நெஸ் அவென்யூ அருகே 16 வயதான இளைஞர்கள் இருவர் வடக்கு நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

இந்த நிலையில், அடையாளம் காணப்படாத ஒருவர், குறித்த இளைஞர்களில் ஒருவரை போக்குவரத்து நெரிசலினிடையே தள்ளிவிட்டுள்ளார். இதில், பாய்ந்து வந்த லொறி மீது மோதிய அந்த இளைஞர், ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக அந்த வாகன சாரதி துரிதமாக செயல்பட்டு வாகனத்தை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார். இதனால் அந்த இளைஞர் காயங்களுடன் தப்பியதாக கூறப்படுகிறது.

பொதுவாக லொறிகள் அப்பகுதில் முழு வேகத்தில் கடந்து செல்வது வழக்கம் என தெரிவித்துள்ள பொலிசார், குறித்த சாரதி சமயோசிதமாக செயல்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் இதுவரை, அந்த மர்ம நபர் தொடர்பில் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், கைது நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

குறித்த சம்பவத்தில் தொடர்புடைய அந்த மர்ம நபர் தொடர்பில் தகவல் அல்லது காணொளி பதிவுகள் இருப்பின், பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய அந்த இளைஞர் தற்போது ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Contact Us