ஏரோநாட்டிகல் இன்ஜினியரான பரோட்டா மாஸ்டர்… 3ம் வகுப்பிடம் ஏமாந்த பட்டதாரி பெண்..!

மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தவர், தான்‌ ஒரு ஏரோநாட்டிகள் இன்ஜினியர் என கதை விட்டு, முதுநிலை பட்டதாரி பெண்ணை ஏமாற்றி அவரிடம் பணம் மற்றும் நகைகளை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோயில் வீதியை சேர்ந்தவர் கண்ணன்(47). திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் இவர் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அஞ்சலக வீதியில் குடும்பத்துடன் தங்கி இருந்து, பெருமாநல்லூர் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

இவர் அதே பகுதியை சேர்ந்த திருமணமாகாத 33 வயது பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் அந்த பெண்ணிடம் தனக்கு திருமணம் ஆகவில்லை எனவும், ஏரோநாட்டிகல் படித்துள்ளதாகவும், தனக்கு கோவை விமான நிலையத்தில் வேலை கிடைத்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

அந்த வேலையை பெற முன் பணம் கட்டினால் வேலை கிடைத்துவிடும், வேலை கிடைத்ததும் திருமணம் செய்வதாகக் கூறி அப்பெண்ணிடம் 22 1/2 பவுன் நகை,ரூ.50 ஆயிரம் பணத்தை சிறிது சிறிதாக வாங்கியுள்ளார். இந்த நிலையில், கண்ணன் திடீரென தலைமறை வானார். இதனை அறிந்த அந்த பெண், பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர்கள், சம்பவம் குறித்து பெருமாநல்லூர் போலீஸாரிடம் புகார் அளித்தனர்.

அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து கண்ணனை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவான கண்ணனை போலீஸார் கைது செய்து அவரிடம் இருந்து 16 பவுன் நகையை மீட்டனர்.

நன்கு படித்த பெண் ஒருவரை 3ம் வகுப்பு மட்டுமே படித்து ஏரோநாட்டிகல் இன்ஜினியர் என்று பொய் சொல்லி ஏமாற்றி அவரிடம் இருந்து பணம் நகையை பறித்து சென்ற‌ சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us