நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தமிழகம் முழுவதும் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் கொண்டவர் நடிகர் விஜய். பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருவதுடன், சமூகம் சார்ந்து பல்வேறு கருத்துகளையும் துணிச்சலாக கூறுபவர். அவ்வாறு அவர் கூறுகையில், சிலர் வேண்டுமென்றே அவரது மதத்தையும், பெயரையும் கூறி விமர்சிப்பதுண்டு.

நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து பேச்சுகள் அவ்வப்போது அடிபட்டு வருவதற்கிடையே, அவரும் தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்த தவறியதில்லை. சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அவரது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியைப் பெற்றனர்.

இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசிக்கு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அதன் முடிவில், அது வெறும் வதந்தி என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வரன் என்பதை கண்டறிந்துள்ளனர். இவர் ஏற்கனவே அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வீடுகளுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேலதிக விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us