ஆசை காட்டி மோசம்.. 130 பெண்களை கடத்தி விற்பனை செய்த கொடூரன்!

130 பெண்களை கடத்தி விற்பனை செய்த கொடூரனை ஆப்கானிஸ்தான் காவல்துறையினர் கைது செய்தனர்.
சுமார் 130 பெண்களை கடத்தி விற்பனை செய்த கொடூரனை ஆப்கானிஸ்தானில் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தனர். இந்நிலையில், சுமார் 130 பெண்களை கடத்தி விற்பனை செய்த நபரை கைது செய்துள்ளதாக தாலிபான் காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட குற்றவாளியை ஜவ்ஸ்ஜான் மாகாணத்தில் கைது செய்ததாக தாலிபான் மாகாண காவல்துறை தலைவர் தமுல்லா செராஜ் தெரிவித்துள்ளார். தற்போது ஆரம்பகட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்து கூடுதல் தகவல்கள் திரட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் ஏழைப் பெண்களை குறிவைத்து கடத்தியுள்ளார். முதலில் அவர்களை பணக்கார ஆண்களுக்கு திருமணம் செய்துவைப்பதாக ஆசை வார்த்தை கூறி பெற்றோரை ஏமாற்றியுள்ளார். பின்னர் அப்பெண்களை கடத்தி வேறு மாகாணங்களில் விற்பனை செய்துள்ளார்.

அந்தப் பெண்களோ அங்கு அடிமைகள் போல நடத்தப்பட்டுள்ளனர். இதுபோல 130 பெண்களை கடத்தி விற்றுள்ளார் அந்த நபர். ஆப்கானிஸ்தான் வறுமையாலும், உணவுப் பஞ்சத்தாலும் தத்தளித்து வருகிறது. இதனால், பல பகுதிகளில் ஏழைப் பெண்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

Contact Us