இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா வழக்கு: கோவை கோர்ட் கொடுத்த அனுமதி

இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்காவின் கூட்டாளி சனதனநாயகே மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த கோபாலகிருஷ்ணன் ஆகியோரை 5 நாள் சிபிசிஐடி போலீஸ் காவலில் விசாரிக்க கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றம் அனுமதியளித்தது.
கோவையில் கடந்த 2020ம் ஆண்டு சரவணம்பட்டியில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி மதுரையில் எரியூட்டப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார், லொக்காவின் காதலி அமானி தாஞ்சி, வழக்கறிஞர் சிவகாம சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோரை கைது செய்திருந்தனர்.

இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த லொக்காவின் கூட்டாளி சனதனநாயகே மற்றும் அவருக்கு அடைக்கலம் அளித்த கோபாலகிருஷ்ணன் என்கிற ஜெயபால் ஆகிய இருவரையும் கடந்த 13ம் தேதி பெங்களூரில் கைது செய்து, கோவை அழைத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பெருந்துறை கிளைச்சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளிக்க கோரி சிபிசிஐடி போலீசார் சார்பில் கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு இன்று நீதிபதி சஞ்சீவ் பாஸ்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு விசாரணை முடிவில் இருவரையும் வருகிற 20ம் தேதி வரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வருகிற 20ம் தேதி காலை 11 மணிக்குள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் இருவரும் விசாரணைக்காக ரகசிய இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். உயிரிழந்த அங்கொட லொக்காவிடமிருந்து மாயமான துப்பாக்கி தொடர்பான விசாரணை நடைபெற்ற போது, வழக்கறிஞர் சிவகாம சுந்தரி, அந்த துப்பாக்கி சனதனநாயகே வசம் இருப்பதாக கூறியதாக தெரிகிறது.

இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் கோபாலகிருஷ்ணன் மீதும், வேறு சில இலங்கை குற்றவாளிகளுக்கு அடைக்கலம் அளித்ததாக புகார் உள்ளதால் அது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Contact Us