விதுஷனின் கொலையில் பொலிசார் தொடர்பு திடுக்கிடும் தகவல்கள் -VIDEO-

பொலிஸ் அதிகாரி ஒருவர் எனது மகனின் கொலையுடன் 9 வது கொலையை செய்துள்ளதாக ஊருக்குள் சொல்லிக்கொண்டு இருப்பதாக மட்டக்களப்பில் உயிரிழந்த விதுசனின் பொற்றோர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

இன்று (22) மட்டக்களப்பு நீதிமன்றத்தில் மட்டு.ஜெந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் விதுஷன் எனும் இளைஞனின் மரணம் தொடர்பாக விசாரணை இடம்பெற்றது.

இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தனர்.

விதுஷன் என்ற இளைஞன் கடந்த ஜூன் மாதம் 3ம் திகதி ஐஸ் போதை பொருள் வியாபாரம் செய்வதாக கூறி இரவு 10.45 மணியளவில் கைது செய்யப்பட்ட நிலையில் மறுநாள் காலை அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் இருக்கும் போதே மரணமடைந்தார்.

மேலும், ஐஸ் போதை பொருள் உட்கொண்டதாலேயே மரணம் நிகழ்ந்ததாக பொலிஸ் தரப்பு கூறியது. மட்டக்களப்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையிலும் இளைஞனின் மரணம் ஐஸ் போதை பொருள் உட்கொண்டமையாலே ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸார் அடித்ததாலேயே தனது மகன் மரணம் அடைந்திருக்கலாம் என நீதிமன்றத்தில் சந்தேகம் எழுப்பப்பட்டதால் புதைக்கப்பட்ட விதுசனின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து, பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் முன்னிலையில் மீளவும் பிரேதப் பரிசோதனை செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்று மன்றில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியின் அவதானிப்பு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதில் இளைஞனின் உடலில் 31 இடங்களில் அடி காயமிருந்தது அவதானிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது

Contact Us