குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை : குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்.. அலறிய மனைவிகள்!!

17 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்து, கர்ப்பமாக்கிய வாலிபருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மறவாமதுரை பக்கம் கங்காணிபட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் ( வயசு 34). கூலி தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர்.

இந்த நிலையில் ராஜ்குமார் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமியை மிரட்டி, தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். அதை கலைக்க மருத்துவமனைக்கும் சென்று முயற்சி செய்துள்ளார்.

இதுதொடர்பாக கடந்த 2020ஆம் ஆண்டு கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். இதனையடுத்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை வந்த இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதற்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், ரூபாய் 50 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் ஓர் ஆண்டு சிறை தண்டனையும், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 20 ஆயிரம் அபராதம், கட்ட தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்தற்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதம் ரூ 5000, கட்டத் தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து, இதை ஏக காலத்தில் அனுபவிக்க புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி முனைவர் சத்யா உத்தரவிட்டார்.

மேலும் சிறுமிக்கு ரூபாய் 1½ லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி ஆண் குழந்தை பெற்றெடுத்து அந்த குழந்தைக்கு 1¼வயது ஆகிறது.

Contact Us