காதலித்த பள்ளி மாணவர், மாணவி மர்ம மரணம்… கள்ளக்குறிச்சியில் ஆணவக்கொலை?

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவ, மாணவி இருவர் மரணம் ஆணவக்கொலையா என கேள்வி எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடி கோமுகி ஆற்றங்கரையோரம் மரத்தில் தூக்கு மாட்டிய நிலையில் 17 வயது சிறுவன், ஆற்றில் மிதக்கும் நிலையில் 17 வயது சிறுமி ஆகிய 2 உடல்களையும் காவல்துறையினர் கைப்பற்றி கொலையா ? ?.. தற்கொலையா ? ?.. என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்..

கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடி கோமுகி ஆற்றங்கரையோரம் மரத்தில் தூக்கு மாட்டிய நிலையில் ஆண் சடலமும், ஆற்று நீரில் மிதக்கும் நிலையில் பெண் சடலமும் கிடப்பதாக கள்ளக்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

பின்னர் ஏடிஎஸ்பி ஜவஹர்லால், டிஎஸ்பி ராஜலட்சுமி சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனைத் தொடர்ந்து இருவரின் உடல்களும் கைப்பற்றப்பட்டு விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

மேலும், இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் இருவரும் குதிரைசந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், அதே கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இவர்கள் இருவரும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுவன் மற்றும் 17 வயது சிறுமி என தெரிய வந்தது. இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது

இவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் குடும்பத்தில் எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. எதிர்ப்பை மீறி கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். பெண் வீட்டார் கடந்த 21 ஆம் தேதி கச்சராபாளையம் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட சிறுமி காணவில்லை என புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கள்ளக்குறிச்சி காவல்துறையினர் இவர்களை யாரேனும் கொலை செய்து உள்ளார்களா ?.. அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா ?.. என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Contact Us