ரஷ்ய அரசுத் தொலைக்காட்சியின் செய்தியால் ஏற்பட்ட பரபரப்பு- நடக்கப்போவது என்ன?

 


ரஷ்யா, நேட்டோ நாடுகளின் 32 செயற்கைக்கோள்களை அழிக்கப்போவதாக ரஷ்யா அரசுத் தொலைக்காட்சி எச்சரிக்கை விடுத்து இருக்கின்ற சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் தனது பழைய செயற்கைக்கோள் ஒன்றின் மீது செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை ஏவி அழித்ததன் மூலம், விண்வெளி அறிவியல் உலகில் ரஷ்யா ஏற்படுத்திய அதிர்வுகள் இன்னமும் முடிவுபெறாத நிலையில், ரஷ்ய அரசுத் தொலைக்காட்சி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது பரபரப்பாகி உள்ளது.

ரஷ்யப்படைகள் உக்ரைனின் எல்லையில் குவிக்கப்பட்டிருப்பதை அமெரிக்கா கண்டித்திருக்கும் நிலையில் இந்த செய்தி வெளியாகி உள்ளது.

இவ்வாறு இருக்கையில் சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்கியதில் அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, ஜப்பான் ஆகியவற்றுடன் ரஷ்யாவுக்கும் முக்கியப் பங்கு உண்டு என்று தான் கூற வேண்டும். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் 7 பேரில் 2 பேர் ரஷ்யர் என்பது குறிப்பிடத்தக்க விடயம். இந்நிலையில், இப்படி ஒரு மிரட்டலை ரஷ்யா விடுப்பது விண்வெளி ஆராய்ச்சியாளர்களைத் திகைக்கவைத்திருக்கிறது.

உக்ரைனுக்கு ஆதரவாக பிரிட்டனும் அமெரிக்காவும் படைகளுடன் தயார் நிலையில் இருப்பதாகவும், இது ரஷ்யாவைக் கோபப்படுத்தியிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால், உக்ரைனுக்குள் ஊடுருவும் எந்தத் திட்டமும் தங்களிடம் இல்லை என ரஷ்யாவின் வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பான எஸ்விஆர் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.

மேலும் இவ்விஷயத்தில் அமெரிக்கா தேவையில்லாமல் சத்தம் போடுவதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறது. உக்ரைனின் நகரங்களை ரஷ்யாவின் டாங்குகள் தாக்கி அழிக்கப்போவதாக, அமெரிக்கர்கள் ஒரு அச்சுறுத்தலான தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என எஸ்விஆர் தரப்பில் ரஷ்ய ஊடகங்களுக்குச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் பொதுவாக, எஸ்விஆர் இப்படியான அறிக்கைகளை வெளிப்படையாக வெளியிடுவதில்லை என்பதால், இவ்விவகாரம் மிகுந்த கவனம் பெறுகின்றனவையாகும் .

உக்ரைன் விவகாரத்தை மனதில் வைத்து, விண்வெளிப் போரில் ரஷ்யா இறங்கிவிடுமென்று சொல்லிவிட முடியாதுதான். இப்படியான மிரட்டல்கள் அமெரிக்காவை ஆழம் பார்ப்பதற்கானவையாகவே இருக்கும் என்றே கருதப்படுகிறது என குறிப்பிடப்படுகின்றது.

Contact Us