96 பட நடிகையுடன் ஓரினச் சேர்க்கையாளராக அனகா.. இணையத்தை அலறவிட்ட மகிழினி வீடியோ

இந்த உலகில் ஒரு ஆணும் பெண்ணும் எப்படி காதலித்து திருமணம் செய்து கொள்வது இயல்போ அதேபோல் ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொள்வதும், சேர்ந்து வாழ்வதும் இயல்பான ஒன்றுதான் என்பதை விளக்கும் விதமாக பல குறும்படங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது பிரபல நடிகைகள் கெளரி கிஷன் மற்றும் அனகா ஆகியோர் நடித்துள்ள மகிழினி பாடல் இணையத்தில் டிரண்டாகி வருகிறது. பிறக்கும்போதே உடலியல் ரீதியாக ஏற்படும் மாற்றத்தினால் தான் தன்பாலின ஈர்ப்பாளர்கள் உருவாகிறார்கள். இவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதை அழுத்தமாகவும் அழகாகவும் கூறுகிறது மகிழினி ஆல்பம் பாடல்.

மதன் கார்க்கி வரிகளில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையில் நேற்று வெளியான இப்பாடல் தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கில் 5 வது இடத்தில் உள்ளது. இந்த ஆல்பம் பாடலில் கௌரி கிஷனும் அனகாவும் தன்பாலின ஈர்ப்பாளர்களாக நடித்துள்ளார்கள். மற்ற நடிகைகள் நடிக்க தயங்கும் கேரக்டரில் இவர்கள் இருவரும் நடித்திருப்பது பாராட்டிற்குரியது.

பரதநாட்டியம் மீதான ஆர்வத்தால் சந்தித்து கொள்ளும் இரண்டு பெண்களுக்கு இடையே காதல் ஏற்படுகிறது. அந்த உறவை அவரவர் பெற்றோரிடம் கூறி சம்மதம் பெற எடுக்கும் முயற்சிகளில் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதை 7 நிமிட பாடலில் கிட்டத்தட்ட ஒரு குறும்படமாகவே காட்டி விட்டார்கள்.

தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாக பல படங்கள் வந்திருந்தாலும், இன்னும் பெரும்பாலான மக்களுக்கு இதுகுறித்த சரியான புரிதல் இல்லாமல் உள்ளது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள மகிழினி ஆல்பம் பாடல் ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் என நம்பிக்கை ஏற்படுகிறது.

 

Contact Us