5ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 51 வயது ஆசிரியர்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே சேதியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லைக்கொடுத்த ஆசிரியர் அசோக்குமார்(51) என்பவர் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில்அருகே சேதியூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 25 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அந்தப் பள்ளியில் அசோக்குமார் என்பவர் ஆசிரியராகவும், அவரது மனைவி கலைச்செல்வி தலைமை ஆசிரியராகவும் பணி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஆசிரியர் அசோக்குமார் அதே பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை பாடம் சம்மந்தமாக கேள்வி கேட்டதாகவும், அதற்கு அந்த மாணவி சரியான பதில் அளிக்காததால் கண்டிப்பது போன்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அந்த சிறுமியை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அது சம்பந்தமாக சிறுமியின் பெற்றோர் பள்ளி ஆசிரியரிடம் சென்று கேட்டுள்ளனர். மேலும் இதுதொடர்பாக புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதை தொடர்ந்து மாணவியின் தாய் மல்லிகா சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் விசாரணை செய்த போலீசார், ஆசிரியர் அசோக்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். வேலியே பயிரை மேய்ந்தது போல் மாணவர்களை பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் ஆசிரியர்களே மாணவிகளிடம் அத்துமீறுவது அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

Contact Us