தடைகளை தாண்டிய ஈழத்து தமிழர்கள்; மண்ணுக்கு வித்தான மாவீரர்களை நினைவுகூர தயார்!

 


தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காகத் தமது உயிரை ஈந்த மாவீர்களுக்கு நினைவுகூரும் நாள் இன்றாகும். தமிழ் தாயகத்தில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கு நீதிமன்றங்கள் ஊடான தடையுத்தரவைப் பொலிஸார் பெற முயன்ற போதிலும் பல இடங்களில் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை என்று தான் கூற வேண்டும்.பல இடங்களில் நினைவேந்தல் தடைக்கான பொலிஸாரின் மனுக்களை நீதிமன்றங்கள் நிராகரித்துள்ளன.

மேலும் தாயக தேசமான வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் முழுமையாகமுடக்கப்பட்ட பின்னர், 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டன.மாவீரர் நாளை நினைவுகூர முடியாதளவுக்கு நெருக்கடிகளும் கெடுபிடிகளும் தமிழ்மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டன.

அத்தோடு நல்லாட்சி அரசு உருவான பின்னர், 2016ஆம் ஆண்டு, பகிரங்கமாக மாவீரர்நாள் நினைவேந்தல் நடத்தப்பட்டது.தமிழீழ தேசத்தில் முக்கியமான மாவீரர் துயிலும் இல்லங்களில், மாவீரர்பெற்றோர்களின் கண்ணீர்க் கதறலுடன் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து 2017, 2018ஆம் ஆண்டுகளிலும் மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்குவந்த பின்னர் பகிரங்கமாக மாவீரர் நாளைக் கடைப்பிடித்தவர்கள்,தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை வைத்திருந்தவர்கள் பொலிஸாரால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டனர்.இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, தமிழீழ தனியரசு அமைப்பதற்காகப் போராடி மடிந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரத்தை 1989ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடித்து வருகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படும்.நவம்பர் 26ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாடப்படும். மறுநாள் நவம்பர் 27ஆம் திகதி, மாவீரர்நாள் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்படும்.மாவீரர் நாளன்று தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரை முடிவடையும் தருணம், மாலை 6.05 மணிக்கு ஆலய மணி ஒலிக்க விடப்பட்டு, மாவீரர்களுக்கானநினைவுப்பாடலுடன் ஈகச்சுடரேற்றல் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Contact Us