இலங்கையில் ஒரே நாளில் 10 இடங்களில் கேஸ் சிலிண்டர்கள் வெடிப்பு!

இலங்கையில் சமைய எரிவாயு தொடர்பான சர்ச்சை நீடித்துள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 10 இடங்களில் சிலிண்டர்கள் வெடித்து சிதறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த 10 சம்பவங்கள் முறையே ஹட்டன், மல்லியப்பு, மாரவில, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஹன்வெல்ல, பாதுக்க, எம்பிலிப்பிட்டிய, மாவனல்லை மற்றும் மாத்தறை ஆகிய இடங்களில் பதிவாகியுள்ளன.

மாரவில பொலிஸாரின் தகவல்படி, உள்ளூர் குடியிருப்பில் உள்ள சமையலறையில் நேற்று காலை எரிவாயு கசிவு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெடிப்பு ஏற்பட்டது.

கேஸ் சிலிண்டருடன் இணைக்கப்பட்டிருந்த ரெகுலேட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெடிப்பு ஏற்பட்டதாகவும், கேஸ் அடுப்பு மற்றும் அருகில் இருந்த பல மசாலா பாட்டில்களுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, ஹட்டன் மல்லியப்புவ பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான வாயு கசிவினால் ஏற்பட்ட வெடிப்பினால் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று காலை 8.30 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். கேஸ் சிலிண்டரை இணைக்கும் குழாய் மற்றும் அடுப்பு வெடித்து, காலையில் சமையல் செய்து கொண்டிருந்த போது தீப்பிடித்தது.

இந்த சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மற்றுமொரு சம்பவம் நேற்று மாலை வீட்டின் சமையல் அறையில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததை மாத்தறை பொலிஸார் உறுதிப்படுத்தியதுடன், சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

அப்போது சமையலறையில் யாரும் இல்லை. பலத்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சமையலறைக்குள் ஓடி வந்து பார்த்ததில் அதிர்ச்சி அடைந்தனர். ரெகுலேட்டர் அருகே காஸ் சிலிண்டரின் மேல் பகுதியும், கேஸ் ஸ்டவ்வும் சேர்ந்து வெடித்து சிதறியதை அவதானித்துள்ளனர்.

அருகில் இருந்த கண்ணாடி குடுவை உடைந்து சிதறியதால் சமையல் அறையைச் சுற்றிலும் சிதறியதாக மக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, மாத்தறை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எம்பிலிப்பிட்டியவில் நேற்று கதுருகசர சந்திக்கு அருகில் உள்ள குடியிருப்பில் உள்ள சமையலறை ஒன்றில் மேலும் ஒரு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டு உரிமையாளர் ஒரு கெட்டியை அடுப்பில் வைத்துவிட்டு அறைக்கு வந்த சிறிது நேரத்தில் பலத்த சத்தம் கேட்டது. கேஸ் அடுப்பு வெடித்து தீப்பிடித்ததை தான் பார்த்ததாகவும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இது குறித்து எம்பிலிபிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தித்தெனிய தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு கொண்டு வரப்பட்ட மற்றுமொரு எரிவாயு சிலிண்டர் நவம்பர் 28ம் திகதி இரவு வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன், சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த கேஸ் சிலிண்டர் நவம்பர் 24ம் திகதி வாங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிப்பில் வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதேவேளை, கடந்த நவம்பர் 28ம் திகதி யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் உள்ள வீடொன்றிலும், கிளிநொச்சி திருவையாறு பகுதியில் உள்ள வீடொன்றிலும் எரிவாயு அடுப்பு தொடர்பான இரண்டு விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

மேலும், புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீடு மற்றும் கேகாலை றொக்ஹில் கஹடபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து எரிவாயு கசிவு காரணமாக நவம்பர் 28ம் திகதி இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

இதேவேளை, நாடெங்கிலும் சிலிண்டர்களில் கசிவுகள், வெடிப்புக்கள் காரணமாக ஏற்பட்ட விபத்துக்கள் குறித்து மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

விசாரணைகளுக்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் டி.எம்.டப்ள்யூ.தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

Contact Us