இறைச்சி சாப்பிட காத்திருந்த கணவன் – தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி

கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்திருக்கிறார் மனைவி. மதுரை மாவட்டத்தில் மேலூர் அருகே நடந்திருக்கிறது இந்த கொடூர சம்பவம் .

மதுரை மாவட்டத்தில் மேலூர் அடுத்த வல்லாளப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டாக இருந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஷீலா என்ற மனைவியும் விஜயதர்ஷினி, விஜயராமன் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மேலூர் அடுத்த எம்.மலம்பட்டியில் சொந்த வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர்.

மணிகண்டனுக்கு மது பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்து விட்டு வந்து ஷீலாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். சம்பவத்தன்று அப்படித்தான் மது போதையில் இறைச்சி வாங்கி வந்த மணிகண்டன் ஷீலாவிடம் கொடுத்து சமைக்கச் சொல்லி இருக்கிறார்.

சமைத்துக் கொண்டிருந்த போது அவருடன் தகராறு செய்திருக்கிறார் மணிகண்டன். தகராறு முற்றி இருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த ஷீலா, வீட்டில் கிடந்த அம்மிக்கல்லை எடுத்து மணிகண்டனின் தலையில் போட்டு இருக்கிறார். இதில் தலை முழுவதும் சிதைந்து சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்திருக்கிறார். இதன் பின்னர் மேலூர் போலீசாருக்கு போன் போட்டு தகவல் தெரிவித்திருக்கிறார் ஷீலா.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மணிகண்டன் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ,மணிகண்டனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்திருக்கிறது என்றும், இதனால் மணிகண்டனுக்கும் ஷீலாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

சம்பவத்தன்று இந்த தகராறு முற்றி போனதுதான் கொலைக்கு காரணம். ஆத்திரத்தில் அம்மிக்கல்லை தூக்கி போட்டு கணவனை கொலை செய்து இருக்கிறார் என்று தெரியவந்திருக்கிறது.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அம்மிக்கல்லை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கணவனை அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொலை செய்து விட்டு அவரே போலீசுக்கு போன் செய்தும் தகவல் சொன்னது மேலூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Contact Us