ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை: சுடுகாட்டில் நகைகள்… சிங்க முகமூடி கொள்ளையன் பிடிபட்டது எப்படி?

வேலூர்: ஜோஸ் ஆலுக்காஸில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை கைதான கொள்ளையன் சுடுகாட்டில் புதைத்து வைத்திருப்பது கண்டுபிடிப்பு. நகைகளை தோண்டியெடுத்துள்ள போலீசார் அதனை சரிபார்த்து வருகின்றனர். கொள்ளையன் பிடிபட்டது எப்படி?

வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியில் பிரபல நகைக் கடையான ஜோஸ் ஆலுக்காஸ் உள்ளது. இந்த கடையின் பின் பக்கசுவற்றில் துளையிட்டு கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு பல கோடி மதிப்பிலான சுமார் 15.8 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக நகை கடை மேலாளர் அளித்த புகாரின் பேரில் வேலூர் சரக டிஐஜி பாபு வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில் 4 டிஎஸ்பி தலைமையில் 8 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே, நகைக்கடை உள்ளே சிங்கம் முகமூடி அணிந்து கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி வெளியானது. இந்த சிசிடிவி காட்சி காவல் துறை சார்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு பள்ளி கொண்ட பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் லேப்டாப் திருடப்பட்ட சம்பவத்தில் கிடைக்கப்பட்ட சிசிடிவி காட்சியும் ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் கிடைக்கப்பட்ட சிசிடிவி காட்சி ஓரளவு ஒரே மாதிரியாக இருப்பதை கண்டறிந்த தனிப்பிரிவு போலீசார் அந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கொள்ளை நடந்த மறுநாள் ஒடுக்கத்தூர் பகுதியில் ஆசிரியருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு இருந்து அடிக்கடி சுடுகாட்டிற்கு சென்று வந்ததை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து சந்தேகத்தின் அடிப்படையில் வேப்பங்குப்பம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் அந்த சந்தேகத்துக்கு உள்ளான நபரை பிடித்து விசாரித்ததில், அவர் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த குச்சிபாளையம் பகுதியைச் சார்ந்த டிக்கா ராமன் என்ற 27வயது மதிக்கத்தக்க நபர் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை கடந்த சனிக்கிழமை இரவு தனிப்படை போலீசார் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகை மற்றும் வைரங்கள் உத்தர காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள சுடுகாட்டில் புதைத்து வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் சுடுகாட்டிற்கு சென்று புதைக்கப்பட்ட நகைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனை அடையாளம் காண டிக்கா ராமன் உடன் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். மேலும் சுடுகாட்டுப் பகுதியில் வெவ்வேறு மூன்று இடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் வைரங்கள் புதைத்து வைத்து இருப்பதை கண்டறிந்த போலீசார் அதனை மீட்டனர்.

Contact Us