யார் கைகளில் காசு புரளும் ? 2022 புத்தாண்டு பலன்கள் இதோ வாசித்து அறிந்து கொள்ளுங்கள்..

2022ஆம் ஆண்டில் கால புருஷ தத்துவப்படி சனிபகவான் பத்தாம் இடமான மகரம் ராசியிலும் 11ஆம் வீடான கும்ப ராசிக்கும் செல்கிறார். தற்போது லாப வீட்டில் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் குருவும் ஏப்ரல் மாதத்தில் அதிசாரமாக சென்று மீனம் ராசியில் அமரப்போகிறார்.  ஒட்டு மொத்தத்தில் சொல்லப் போனால், ரிஷபம், துலாம், தனுசு ஆகிய 3 ராசிகளுக்கு அமோகம் தான்…. பண வரவு கொட்ட வாய்ப்பு உள்ளது…அதன் அடிப்படையில் பலன்கள் இதோ.. கீழே உள்ளது.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு பொருளாதாரத்தில் ஏற்றம் தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. வெளிநாடு செல்ல வேண்டும் என்று நீண்ட காலமாகவே நினைத்திருந்தவர்களின் கனவு நனவாகப் போகிறது. சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்தும்,மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் பொருளாதாரமும் முன்னேற்றமடையப்போகிறது. சனிபகவான் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். குரு லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் அயல்நாட்டு வியாபாரம் சூடுபிடிக்கும். சனி பகவானும் லாப வீட்டிற்கு வரப்போவதால் உங்களின் வருமானமும் அதிகரிக்கும். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். படித்து விட்டு அரசு வேலைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஏப்ரல் மாதம் நிகழப்போகும் அதிசார குரு பெயர்ச்சியும் ராகு கேது பெயர்ச்சியும் சில சாதகமான பலன்களை தரப்போகிறது. திரைகடல் ஓடி திரவியங்கள் தேடி நிறைய சம்பாதித்து ,பேரும் புகழும் கிடைக்கப் பெறுவீர்கள்.

ரிஷபம்:
சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீட்டில் குரு, பாக்ய ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் பயணம் செய்வதால் பாக்கியங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. வெளியூர், வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்யலாம். புதிய வேலை கிடைக்கும். சம்பள உயர்வும் அதிகரிக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. ராகு ஜென்ம ராசியில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு செல்லப்போகிறார். மன அழுத்தங்கள் நீங்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். ராகு ,கேதுவால் வரக்கூடிய தோஷங்கள் விலகும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மிதுனம்::
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே, குருவின் பார்வை உங்களுக்கு குதூகலத்தை தரப்போகிறது. கல்வியில் இருந்த மந்த நிலை விலகி முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண்கள் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெற முடியும். குருவின் பயணம் சனியின் சஞ்சாரம் சாதகமான பலனை தரப்போகிறது. புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். வெளிநாட்டு யோகம் கை கூடி வரப்போகிறது. குருபகவான் அதிசாரமாக பயணிக்கும் காலத்தில் வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். அஷ்டம சனியின் பிடியில் இருந்து விடுபடும் காலம் வந்து விட்டது. மனநிலையில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவடையும். யோகங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். சில மாதங்கள் அஷ்டமச்சனியிலிருந்து பாதிப்பை குறைத்து கொள்ள காலபைரவரை சனிக்கிழமை சனிக்கிழமை சென்று வழிபட்டு வரலாம்.

கடகம்:
சந்திரனை ஆட்சி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே 2022ஆம் ஆண்டில் உங்களுக்கு சனியின் சஞ்சாரம் சாதகமாக இல்லை என்றாலும் குருவின் பயணமும் பார்வையும் சாதகத்தை கொடுக்கும். அலுவலகத்தில் பதவிஉயர்வு, சம்பள உயர்வு என கொண்டாட்டமான,குதூகலமான ஆண்டாகவே 2022 ஆம் ஆண்டு இருக்க போகின்றது. தொழில் ஸ்தானத்தில் அமரப்போகும் ராகு பகவானால் படித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய பதவி உயர்வும் கிடைக்கும். உங்களின் சமூக அந்தஸ்தும் மதிப்பும் மரியாதையும் உயரும். பொருளாதாரம் உயரும். அலுவலகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். சிலர் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றமும் கிடைக்கும். பண வரவும் மனநிறைவும் கொண்ட ஆண்டாக அமையப்போகிறது,

சிம்மம்:
சூரியனை ஆட்சி நாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு பேரும் புகழும் கிடைக்கப்பெரும் வருடமாக இந்த 2022 ஆம் ஆண்டு இருக்க போகின்றது. குருவின் பார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது. பாக்ய ஸ்தானத்தில் பயணிக்கப் போகும் ராகு பகவானால் ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். தொழில் செய்பவர்களுக்கு தொழில் சிறக்கும். சிறிய அளவிலான முயற்சிக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும். தடைபட்ட பணி உயர்வு தேடி வரும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். சம்பள உயர்வுகளும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். பொருளாதார நிலை மேம்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்றபடி வேலை வாய்ப்பு கிடைக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் வெளிநாடு சென்று படிக்க வேண்டும் வேலை செய்ய வேண்டும் என்று விரும்புவர்களின் நோக்கம் நிறைவேறும்.

கன்னி:
அறிவின் நாயகன் புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு 2022ஆம் ஆண்டில் குருவின் பார்வை நேரடியாக கிடைக்கப் போகிறது. ஆண்டின் முற்பகுதியில் சில சறுக்கல்கள் வந்தாலும் ஏப்ரல் மாதம் முதலே சாதனை படிக்கட்டில் பயணம் செய்யப்போகிறீர்கள். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. சனிபகவானும் 6ஆம் வீட்டிற்கு செல்வதால் கடன் பிரச்சினை நீங்கும். நோய் பாதிப்புகள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். எதிரிகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ராகுவின் சஞ்சாரமும் கேதுவின் பயணமும் யோகங்களைத் தரப்போகிறது. மாணவர்கள் மன குழப்பங்கள் நீங்கி தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். புத்தாண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு ஏற்றங்களும் மாற்றங்களும் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இது அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். சுக்கிரன் ஆசியோடு குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். மன நிம்மதி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த ஊடல்கள் நீங்கும். காதலிப்பவர்களுக்கு இந்த ஆண்டு குடும்பத்தினர் அனுமதியோடு திருமணம் கை கூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் கை கூடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் செலுத்துவது அவசியம். மன அழுத்தம் நீங்கி உற்சாகம் அதிகரிக்கும். பொற்காலமான ஆண்டாக அமைந்துள்ளது. வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் வரும் குடும்ப ஒற்றுமை மேலோங்கும்.

விருச்சிகம்:
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, உங்களுக்கு 2022ஆம் ஆண்டு யோகங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். கருத்து வேறுபாடுகளால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். கணவன் மனைவி இடையேயான அன்பும் அன்னியோன்னியமும் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு வாழத் தொடங்குவீர்கள். குரு பகவானின் அருளாலும் குருவின் பார்வையாலும் குழந்தை பாக்கியம் கை கூடி வரும். பிள்ளைகளால் நல்லதொரு செய்தி தேடி வரும். கடந்த காலங்களில் ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்கி இந்த ஆண்டு முதல் மாற்றங்களும் முன்னேற்றங்களும் நிறைந்த நல்லதொரு ஆண்டாக அமைந்துள்ளது.

தனுசு:
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த ஆண்டு சுபத்துவம் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சனிபகவானால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கப்போகிறது. உங்களுடைய திருமண வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. தடைகள் ஏற்பட்டு வந்த திருமண சுபகாரியங்கள் இந்த ஆண்டு வெற்றிகரமாக நிறைவேறும். கடந்த சில ஆண்டுகாலமாகவே கணவன் மனைவிக்குள் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் முடிவுக்கு வரும். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையை வாழத் தொடங்குவீர்கள். குடும்பத்திற்குள் புதிய வரவாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். மழலைச் செல்வம் மடியில் தவழ தனுசு ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். புது வீட்டிற்கு இடமாற்றம் உண்டாகும். வித்தியாசமான முடிவுகளை எடுப்பீர்கள். ஜென்ம சனி விலகுவதால் குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து இணக்கமாக செல்வீர்கள். உங்களின் பொருளாதாரம் இந்த ஆண்டு நன்றாக இருக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். மகர ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. சுப காரிய தடைகள் விலகும். மன குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். சுக்கிரன் அருளால் இல்லற வாழ்க்கை இனிமையானதாக அமையும். திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். குல தெய்வ வழிபாடு நன்மையைத் தரும்.

கும்பம்:
2022 ஆம் ஆண்டில் கும்ப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்திற்காக இந்த ஆண்டு நிறைய நேரம் செலவு செய்வீர்கள். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். எதிலும் யோசித்து செய்வது நல்லது. தன லாபம் அதிகரிக்கும் வருமானம் கூடும் சேமிக்க முடியாத அளவிற்கு சுப செலவுகள் வரும். கஷ்டங்கள் இல்லாத ஆண்டாக அமையும். மனதளவில் ஏற்பட்டிருந்த சங்கடங்கள் நீங்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கை கூடி வரும். பிள்ளைகளுக்காக நிறைய செலவு செய்வீர்கள். குழந்தைகள் விசயத்தில் கூடுதல் பொறுப்புணர்வோடு நடந்து கொள்வீர்கள். 2022ஆம் ஆண்டு சாதனைகள் நிறைந்த ஆண்டாக அமையும். வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்க மகாவிஷ்ணு ஆலயத்திற்கு சென்று மனதார வணங்குங்கள்.

மீனம்:
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, சாதிக்கப் பிறந்தவர்கள் நீங்கள். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு குரு பகவான் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். இரண்டாம் வீட்டில் ராகு என அமர்வது வெற்றியைத் தரும், ஆரம்பமே அமர்களம் என்பது போல உள்ளது. சனிபகவானும் சாதகமாக இருக்கிறார். உழைப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். பேச்சில் கவர்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமணமான தம்பதியருக்கு இடையே அன்பும் நேசமும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் நல்ல செய்தி தேடி வரும். குழந்தை பாக்கியம் கை கூடி வரும். திருமணத்திற்காக எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு ஆண்டின் பிற்பகுதியில் திருமண யோகம் கை கூடி வரும். இந்த ஆண்டு நீங்கள் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

Contact Us