போன் செய்த முதல்வர்.. மீம்ஸ் கிரியேட்டர்கள் செய்த பேருதவி- கொரோனாவிலிருந்து மீண்ட வடிவேலு நெகிழ்ச்சி

நடிகர் வடிவேலு கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளார். தான் கொரோனாவில் இருந்து மீண்டது குறித்து நடிகர் வடிவேலு உருக்கமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். நடிகர் வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்று இருந்தார். அங்கு ஷூட்டிங் முடித்துவிட்டு கடந்த மாதம் 23ம் தேதி தமிழ்நாடு திரும்பினார். சென்னையில் இவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மிக மிக லேசான அறிகுறிகளுடன் இவருக்கு கொரோனா இருந்தது. லண்டனில் அப்போது ஓமிக்ரான் அதிகம் பரவியதால் இவருக்கு ஓமிக்ரான் இருக்குமோ என்ற அச்சமும் நிலவி வந்தது. இதனால் அவர் உடனே போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்ததால் அவர் வேகமாக குணமடைந்தார். இந்த நிலையில் நேற்று முழுமையாக குணமடைந்த நடிகர் வடிவேலு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மீண்ட நடிகர் வடிவேலு முதல்வருக்கும், மீம் கிரியேட்டர்களுக்கும் நன்றி தெரிவித்தார். அதில், நான் கொரோனா காரணமாக அனுமதிக்கப்பட்டதும் முதல் ஆளாக முதல்வர் ஸ்டாலின் எனக்கு போன் செய்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் முதல்வர் ஸ்டாலின் போன் செய்து ஆதரவாக பேசினார்.

எனக்கும் தைரியம் அளித்து நம்பிக்கையூட்டும் விதமாக பேசினார். கொரோனா காலத்தில் நான் நன்றாக உணர மீம்ஸ்கள் முக்கிய காரணமாக இருந்தது. மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மிக்க நன்றி. அவர்கள் எனக்கு ஊக்கம் அளித்து பேருதவி செய்தனர். எனக்காக பிரார்த்தனை செய்த எல்லோருக்கும் நன்றி. மக்கள் எல்லோரும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்க வேண்டும். எல்லோரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். ஓமிக்ரான் பாதிப்பு குறைவாக இருந்தாலும் மக்கள் எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்று வடிவேலு குறிப்பிட்டு இருக்கிறார்.

Contact Us