ஆத்திரம் உயிரை கொல்லும்: லேசான காயத்துடன் வந்து கையை கிழித்துக்கொண்டதால் சோகம்

புதுச்சேரி மாநிலம் திருபுவனை அருகே உள்ள கலிதீர்த்தாள் குப்பம் ரமணா நகரை சேர்ந்த கேசவன் மகன் அரசு (வயது 22). தனியார் நிறுவன ஊழியரான இவர் நேற்று தனது நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடினார். அப்போது, எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் அரசுக்கு கையில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை நண்பர்கள் உடனடியாக திருபுவனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அரசுக்கு சிகிச்சை அளிக்க காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அரசு திடீரென ஆஸ்பத்திரியின் கண்ணாடியை கையால் குத்தினார்.

இதில் உடைந்த கண்ணாடி கீறியதில் அவரது கை நரம்பு துண்டானது. இதனால் ரத்தம் அதிக அளவு வெறியேறிய நிலையில் அதை கண்டு கொள்ளாமல் விட்டதால் அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார். பின்னர் அரசுவை நண்பர்கள் அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே அரசு இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Contact Us