“போர்னு வந்துட்டா ஜெயிச்சாகணும்”.. எலைட் போர்ஸை உருவாக்கும் சீனா.. “திக் திக்” திட்டங்கள்!

 

போர்களை வெல்லும் வகையிலான எலைட் படைகளை உருவாக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவுடன் எல்லைப் பகுதியில் தொடர்ந்து சீண்டலில் ஈடுபட்டு வரும் நிலையில் இப்படி ஒரு புதுப் படையை உருவாக்க சீன அதிபர் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை மனதில் வைத்து இந்த திட்டத்தை சீனா கையில் எடுக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

20 லட்சம் ராணுவத்தினரை உள்ளடக்கிய சீனப்படையின் கூட்டுப் படைத் தளபதியாகவும் ஜி ஜின்பிங் இருக்கிறார். 2012ம் ஆண்டு முதல் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பையும் வகித்து வரும் ஜி ஜின்பிங், ராணுவத்தினருக்கு பிறப்பித்துள்ள இந்த புதிய உத்தரவால் இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்காவும் கூட கவனம் எடுத்துள்ளது.

அதி நவீன போர்ப் பயிற்சி, தொழில்நுட்பங்களின் உதவி, தீவிரப் பயிற்சி உள்ளிட்ட அனைத்து விதமான பயிற்சிகளையும் உள்ளடக்கியதாக இந்த எலைட் படைகளை உருவாக்குமாறு உத்தரவிட்டுள்ளார் ஜி ஜின் பிங். இதுபோன்ற உத்தரவுகளை அவர் பிறப்பிப்பது புதிதல்ல என்றாலும் கூட தற்போது இந்தியாவுடன் மோதல் போக்கில் சீனா உள்ள நிலையில் இவரது உத்தரவு கவனம் பெற்றுள்ளது.

ஜி ஜின்பிங் பிறப்பித்துள்ள உத்தரவில், நவீன தொழில்நுட்ப வசதிகளை படைகளுக்கு அதிகம் பயன்படுத்த வேண்டும். எதிரிகளின் பலம், தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை சமாளிக்கும் வகையிலான வசதிகளை நமது படையிலும் ஏற்படுத்த வேண்டும். கூட்டுப் பயிற்சிகளை அதிகம் மேற்கொள்ள வேண்டும். எந்த வகையான போர் ஏற்பட்டாலும் அதில் நாம் வெல்லும் வகையிலான எலைட் படைகளை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வறு உத்தரவுகளை ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.

அதிகாரிகளும், போர்வீரர்களும், பயமின்றி துணிச்சலுடன் செயல்படுவதற்கு தயாராக வேண்டும். போரின்போது உயிர் விட நேரிட்டாலும் அதற்காக அஞ்சாத உள்ளத்துடன் திடமுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். பயிற்சிகளில் கவனம் அதிகம் இருக்க வேண்டும். எதிரிகளை திறம்பட சமாளித்து வெல்லக் கூடிய வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் ஜின்பிங் கூறியுள்ளார்.

முன்பு சீனாவை விட படை பலத்தில் பலவீனமாக இருந்த இந்தியா இன்று சீனாவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தனது பலத்தை அதிகரித்துள்ளது. லடாக் மற்றும் அருணாச்சல் பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த மோதலில் இந்தியாவின் கை ஓங்கியிருந்ததே இதற்கு சரியான உதாரணமாகும். இந்த நிலையில் சீனாவின் இந்த புதிய நகர்த்தல், இந்தியாவையும் உஷார்படுத்த உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Contact Us