மக்கா… யாழ் ஆரிய குளத்தோடு விளையாட வேண்டாம்: பின்னர் அஸ்தி கரைக்கும் இடமாக மாறிவிடும் !

யாழ்ப்பாணம் ஆரிய குளத்தில் மதச் சின்னங்களை திணிப்பதற்கு அரசு முனைந்தால்,இறந்தவர்களின் அஸ்தி கரைக்கும் புனித நீர் நிலையாக மாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக்கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் ஆரிய குளம் எமது பாரம்பரியம். அது சேற்று குப்பைகளுடன் காணப்படும் போது ஒருவரும் திரும்பி பார்க்கவில்லை.

அதன் பின்னர் யாழ். மாநகர சபையின் முயற்சியால், தற்போது அழகாக சீரமைக்கப்பட்டு மக்கள் தமது பொழுது போக்கு நேரத்தை செலவழிப்பதற்காக அங்கு வருகின்றனர். ஆனால், வடக்கு மாகாண ஆளுநர் தற்போது தூக்கத்திலிருந்து விழித்தது போல புது புரளியை கிளப்பியுள்ளார். ஆரிய குளம் மாநகர சபைக்கு சொந்தமானது என ஆவணங்களை சமர்ப்பியுங்கள், சமய சின்னங்கள் தொடர்பாக வெளிப்படுத்துங்கள் என வடக்கு மாகாண ஆளுநர், மாநகர சபைக்கு கடிதம் ஒன்றை தற்போது அனுப்பியுள்ளார். அன்று ஆரிய குளம் சீரமைக்கப்பட்டு திறந்து வைக்கும் நிகழ்வுக்கு ஆளுநர் வருகை தந்தபோது, அவருக்கு தெரியவில்லையா இது யாருடைய சொத்து என்று ?

ஆரிய குளம் எமது சொத்து அதையும் அரசு கையகப்படுத்தப் பார்க்கிறது. எமக்கு தெரியும் வடக்கு மாகாண ஆளுநர் ஜனாதிபதி கோட்டாவின் எடுபிடி, அவர் தன்னுடைய நிர்வாக வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும்.எமக்கு விளையாட்டு காட்ட வேண்டாம். மாநகர முதல்வரை பணியவைக்கும் செயற்பாட்டுக்கு தமிழ் மக்கள் துணைபோக மாட்டார்கள். பௌத்த மக்கள் வழிபடுவதற்கு அருகில் நாக விகாரை உள்ளது. போய் வழிபடட்டும் நாம் அதைப்பற்றி ஏதும் கேட்வில்லை.கண்டி வாவியில் பிள்ளையார் கோவில் கட்ட விடுவீர்களா? ஏன் இப்போது இங்கு வந்து புது புரளியை ஆளுநர் கிளப்புகின்றார் ? மதச் சின்னங்கள் தொடர்பில் அவர் பிரச்சினை செய்வாரானால், மக்களின் புனித அஸ்தி கரைக்கும் இடமாக ஆரிய குளத்தை மாற்ற வேண்டி வரும். இவ்வாறு சிவாஜிலிங்கம் அனல் பறக்க பேசியுள்ளார்.

Contact Us