கடமை முடித்து வீடு திரும்பிய பெண் ஊழியருக்கு வனப்பகுதியில் நேர்ந்த கொடுமை

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவர் மீது ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் காட்டுப்பகுதியில் வைத்து தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஊழியர் மீது எதோ ஒரு திரவத்தை வீசி தாக்குதல் மேற்கொண்ட நிலையில், அவர் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தூரப் பிரதேசங்களில் இருந்து வனப்பகுதிகளைக் கடந்து பணிக்கு வரும் ஊழியர்களை கடும் அச்சத்தில் தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பணியாற்றி வருகின்ற பெண் சிற்றூழியர் ஒருவர் நேற்று இரவு தன்னுடைய கடமைகளை நிறைவு செய்து, இன்று அதிகாலை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இருந்து கொக்காவில் வீதி துணுக்காய் எனும் முகவரியில் அமைந்திருக்கின்ற தன்னுடைய வீட்டிற்கு மோட்டார் வண்டியில் ஒட்டுசுட்டான் நகரத்தை தாண்டி மாங்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வனப்பிரதேசத்தில் வீதியில் நின்ற இருவர் குறித்த ஊழியர் மீது ஏதோ ஒரு திரவத்தை வீசியுள்ளனர்.

இதனால் கண்கள் பாதிக்கப்பட்ட குறித்த ஊழியர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்ல முடியாத நிலையில் அருகில் இருந்த ஒரு பொதுக் கிணற்றில் சென்று முகத்தை கழுவிய போதும், கண்ணில் பார்வை சீராகாத நிலையில் குறித்த பகுதியில் இருந்த ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்து அங்கிருந்து அவசர தொலைபேசி ஊடாக நோயாளர் காவுவண்டியை அழைத்து மாவட்ட வைத்தியசாலைக்கு வருகை தந்திருக்கிறார்.

இந்நிலையில் அவருடைய கண்களில் பார்வை பிரச்சினை ஆகியுள்ள நிலையில் ,என்ன திரவம் வீசப்பட்டுள்ளது என்பது தொடர்பில் ஆராய அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Contact Us