ஆப்கானிஸ்தானில் காணாமல் போன பச்சிளம் குழந்தை…. 5 மாதங்களுக்கு பின் மீட்பு….!!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்பு, அந்நாட்டு மக்கள் காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியேறினர். அப்போது அந்நாட்டைச் சேர்ந்த மிர்சா அலி அகமதி மற்றும் அவரின் மனைவி சுரயா இருவரும் காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டத்தில் திணறிக் கொண்டிருந்தனர்.

எனவே, எப்படியும் நுழைவு வாயிலுக்கு சென்றுவிடுவோம் என்று கருதி தன் குழந்தையை அமெரிக்க பாதுகாப்பு வீரரிடம் கொடுத்தனர். அதன்பின்பு, நுழைவு வாயிலுக்கு அவர்கள் சென்றபோது, குழந்தையை காணவில்லை. உடனே, மிர்ஸா அலி, அங்கிருந்த அமெரிக்க அதிகாரிகளிடம் இதுகுறித்து கூறினார்.

அவர்கள், குழந்தை வேறு விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டிருக்கும். எப்படியும் குழந்தையை கண்டுபிடித்து உங்களிடம் ஒப்படைப்பார்கள் என்று தெரிவித்தனர். எனவே அவர் தன் குடும்பத்தினருடன் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ராணுவத்தளத்திற்கு சென்றார். அங்கு குழந்தையை தேடி பார்த்தனர். அங்கும் குழந்தை இல்லை.

அதன்பிறகு பல மாதங்கள் கடந்தும் குழந்தை கிடைக்கவில்லை. அதாவது, அந்த சமயத்தில் கால் டாக்ஸி ஓட்டுனர் ஹரீத் சபி என்பவர் அந்த குழந்தை விமானநிலையத்தில் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து, உடனே தன் வீட்டிற்கு எடுத்து சென்று விட்டார். சபிக்கு ஆண் குழந்தை இல்லை.

எனவே, குழந்தையை அவர்கள் வளர்க்க தீர்மானித்தனர். அந்த குழந்தைக்கு “முகமது அபெட்” என்று பெயர் சூட்டி வீட்டில் வைத்துக் கொண்டனர். அவருக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறது. அவர்களோடு சேர்த்து இக்குழந்தை இருக்கும் புகைப்படத்தை முகநூல் தளத்தில் சபி பதிவிட்டிருக்கிறார்.

இதனை, குழந்தையின் தாத்தா முகமது ரசாவி, பார்த்து குழந்தை இருக்கும் முகவரியை கண்டறிந்து விட்டார். உடனே அவரிடம் தன் பேரனை தங்களிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்து பணத்தை கொடுத்திருக்கிறார். ஆனால் அவர் குழந்தையை திருப்பி தர மறுத்துவிட்டார். அதன்பிறகு, செஞ்சிலுவை சங்கத்தின் உதவியோடு அவர் தன் பேரனை மீட்டு விட்டார்.

எனினும், ஐந்து மாதங்களாக நன்றாக குழந்தையை பார்த்துக் கொண்டதற்காக அவருக்கு தொகை வழங்கப்பட்டது. தற்போது குழந்தை, அவரின் தாத்தாவோடு அமெரிக்காவில் இருக்கிறது.

Contact Us