“தீர்மானங்களை எடுக்கும் ஏழு ராஜபக்சர்கள்”

இலங்கையின் பொருளாதாரம் குறித்து ராஜபக்ச குடும்ப அங்கத்தவர்களே தீர்மானங்களை எடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன (Eran Wickramaratne) குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பு – மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

வரவுசெலவுத் திட்டத்தின் 60 வீதமான பங்கு ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அங்கத்தவர்களின் நிர்வாகத்தில் இருக்கின்றது. இது பொருளாதாரத்திற்கு பாதிப்பானது.

சர்வாதிகார சிந்தனையில் நாட்டின் பொருளாதாரம் குறித்து தீ்ர்மானங்களை எட்ட முடியாது. சர்வாதிகாரியினால் நாட்டை ஆளமுடியாது.

அது தற்போது நிரூபனமாகியுள்ளது. பொருளாதாரம் என்பது ஒரு பிணைப்பு. உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி என சகல தரப்புடனும் பின்னிப்பிணைந்துள்ள ஓர் அம்சமாகும்.

ஆட்சியாளர்களின் திறமையற்ற முகாமைத்துவம் காரணமாக நாடு இந்த நிலையினை அடைந்துள்ளது. வடக்கில் உள்ள பல பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள், காலணிகள் இன்றி பாடசாலைக்கு சென்று வருகின்றனர்.

இதனைப் பார்க்கும் போது இலங்கையின் பொருளாதார நிலை குறித்து நன்கு அறிந்து கொள்ள முடியும். இது எமது நாடு. ஆகவே நாட்டையும் மக்களையும் முன்னெற்ற வேண்டும். எனவேதான் இதனை மாற்றியமைக்க வேண்டும்.

பொருளாதார முகாமைத்துவத்தினை சரியான பாதையில் கொண்டு செல்வதன் ஊடாக நாட்டினை மீளக்கட்டியெழுப்ப முடியும். எந்த நேரமும் கடன் கடன் என்று கூறிக் கொண்டு இருக்காமல் வருமானம் தரும் உபாயங்களை ஆட்சியாளர்கள் தேட வேண்டும். எம்மிடம் அதற்கான திட்டங்கள் இருக்கின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Contact Us