கியூபெக்கில் தடுப்பூசி பெறாத தந்தைக்கு இப்படி ஒரு நிலை;12 வயது மகளை பார்க்க அனுமதி மறுப்பு!

கனடாவில் 12 வயது சிறுமியை சந்திக்க அவளது தந்தைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது!

கியூபெக்கைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியைப் பிரிந்த நிலையில், அவரது 12 வயது மகள், அவரது மனைவியுடன் வாழ்ந்து வருகிறாள்.

அதாவது, அந்தப் பெண் கணவரைப் பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு நான்கு வயது மற்றும் ஏழு மாதங்களே ஆன வேறு இரண்டு பிள்ளைகளும் இருகிறார்கள்.

இந்நிலையில், அந்த 12 வயது பிள்ளையை சந்திக்க அதன் தந்தைக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தன் மகளுடன் கூடுதல் நேரம் செலவழிக்க அனுமதிக்குமாறு அவர் நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.

ஆனால், பிள்ளையின் தாய் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காரணம், பிள்ளையின் தந்தை இதுவரை கொரோனா தடுப்பூசி பெறவில்லை. அத்துடன், தனது சமூக ஊடக கணக்குகளில் அவர் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கருத்தும் தெரிவித்துள்ளதாக பிள்ளையின் தாய் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பிள்ளை தடுப்பூசி பெற்றிருந்தாலும், தற்போது தடுப்பூசியையும் மீறி கியூபெக்கில் வேகமாக Omicron வகை கொரோனா வைரஸ் பரவிவருவதால், பிள்ளையை அதன் தந்தையுடன் அனுப்புவது பிள்ளையின் நலனை பாதிக்கும் என்றும், அத்துடன், அவர் தனது மகளைப் பார்ப்பதற்காக செல்வதால், அந்த வீட்டில் தடுப்பூசி பெறும் வயதை அடையாத மேலும் இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில், அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்றும் கூறியுள்ளார் நீதிபதி.

ஆகவே, தந்தையின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், அவர் தடுப்பூசி பெற முடிவு செய்தாலன்றி, பிப்ரவரி மாதம் வரை பிள்ளையைச் சென்று பார்ப்பதற்கு தடை விதிப்பதாகவும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Contact Us