நர்சிங் மாணவிக்கு மது கொடுத்து கல்லூரி உரிமையாளர் பாலியல் தொல்லை

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் 17 வயது நர்சிங் கல்லூரி மாணவி. நேற்று கல்லூரிக்குச் செல்வதாக கூறி விட்டுச் சென்றவர் பண்ருட்டி-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து திடீரென கீழே குதித்தார். இதில், கால்கள், இடுப்பு எலும்பு முறியப்பட்ட நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கல்லூரி மாணவியின் இந்த திடீர் முடிவு பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் அவரது அண்ணன் மாணவியிடம் பேசாமல் இருந்ததால் மனமுடைந்து இந்த முடிவை எடுத்ததாக தெரிய வந்தது.

பின்னர், அண்ணன் ஏன் பேசவில்லை என்பது குறித்து பண்ருட்டி போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. மாணவியை கல்லூரி நிர்வாகம் ஏற்காட்டிற்கு கல்வி சுற்றுலாவிற்காக அழைத்துச் சென்றுள்ளது. மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி அறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது, மாணவியின் அறைக்குச் சென்ற கல்லூரி கரஸ்பான்டன்ட் டேவிட்,,பணியாளர்கள் அன்பு, பிரேம் ஆகியோர் மாணவியை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்துள்ளனர். மேலும், பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டனர். இதனை வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாமென எச்சரித்ததோடு, மீண்டும் ஏற்காட்டிற்குச் செல்ல டூர் போட்டுள்ளனர்.

அதற்கு மாணவி வர மறுத்துள்ளார். இதற்கான காரணத்தை சக மாணவி கேட்ட போது அவர் ஏற்காட்டில் தனக்கு நடந்த கொடுமையை கூறியுள்ளார். அந்த மாணவி, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து, மாணவியை அவரது பெற்றோர் திட்டியுள்ளனர். இதனால், மாணவி தற்கொலை செய்துக் கொள்வதற்காக பாலத்திலிருந்து குதித்தது தெரிய வந்தது. இதனையடுத்து, பண்ருட்டி போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து டூருக்கு ஏற்பாடு செய்த தலைமை ஊழியர் நிஷா என்ற பாத்திமா (32), உள்ளிட்டோரை கைது செய்தனர்

Contact Us