அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவால் உலகம் முழுவதும் சுமார் 1.40 கோடி பேர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் பல அதிரடி அறிவிப்புகளை கொடுத்து அதிர்ச்சியளித்து வருகிறார். பிற நாடுகளை சேர்ந்த மக்களை வெளியேற்றுவது, விசா கட்டுப்பாடு, ஏற்றுமதி, இறக்குமதி வரி என உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறார்.
இதோடு நிறுத்தி விடாமல் வெளிநாடுகளுக்கு செய்யப்படும் மனிதாபிமான உதவிகளுக்கான நிதியையும் டிரம்ப் ரத்து செய்துள்ளார். இதனால் உலகம் முழுவதும் 20230ம் ஆண்டுக்குள் 1.40 கோடி பேர் உயிரிழக்க நேரிடும் என கூறப்படுகிறது. குறிப்பாக இதில் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமையான யுஎஸ்ஏஐடி(USAID) மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் 80 % மேலான திட்டங்களை அதிபர் டிரம்பின் நிர்வாகம் ரத்து செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்திருந்தார்.
இப்படி நிதியை நிறுத்தி வைப்பதால் பாதிப்பில் இருக்கும் நாடுகளில் நோய் தொற்று அதிகரிப்பு, பசி, பட்டினி போன்றவைகளின் பாதிப்பு அதிகரிக்க கூடும். 133 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 2001 முதல் 2021 வரை யுஎஸ்ஏஐடி(USAID) நிதியுதவி மூலம் வளரும் நாடுகளில் 9.1 கோடி இறப்புகள் தடுக்கப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது. இந்த நிதியை அதிபர் டிரம்ப் நிறுத்தி வைத்து சுமார் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குவதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.