மன்னார்: இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட ஏழு ராமேஸ்வரம் மீனவர்களையும் எதிர்வரும் ஜூலை 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நேற்று (ஜூலை 1) மாலை உத்தரவிட்டார்.
ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து (ஜூன் 30) மீன்பிடிக்கச் சென்ற இந்த ஏழு மீனவர்களும், நேற்று திங்கட்கிழமை இரவு சர்வதேச எல்லையைத் தாண்டி இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவுடன் அவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தலைமன்னார் கடற்படையினர் நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகளுக்குப் பிறகு, குறித்த மீனவர்கள் (ஜூலை 1) மதியம் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் தங்கள் விசாரணைகளை முடித்த பின்னர், இன்று மாலை குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மன்னார் நீதவான், ஏழு மீனவர்களையும் எதிர்வரும் ஜூலை 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.