Posted in

Ukrainian missile strike: ரஷ்யாவின் அதி உச்ச தளபதியைக் கொன்ற உக்ரைன்

ரஷ்ய கடற்படையின் பிரதித் தளபதி ஒருவர் உக்ரைன் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதை கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த மார்ச் மாதம் ரஷ்ய கடற்படையின் பிரதித் தளபதியாக பதவி உயர்வு வழங்கிய மேஜர் ஜெனரல் மிக்கைல் குட்கோவ் (42) புதன்கிழமை அதிகாலை கொல்லப்பட்டார்.

ரஷ்யாவின் வீரன் எனப் போற்றப்பட்ட இந்த ஜெனரலின் மரணம் புடினுக்கு ஒரு பெரும் பின்னடைவாகும். ஏனெனில், கடல்சார் காலாட்படை மற்றும் அனைத்து ஏவுகணை மற்றும் பீரங்கி கடலோரப் படைகளின் கட்டளையை புடின் தனிப்பட்ட முறையில் இவரிடம் ஒப்படைத்திருந்தார். பசிபிக் கடற்படையின் 155வது கடற்படை காலாட்படைப் பிரிவின் கட்டளையிலும் இவர் தொடர்ந்து இருந்தார்.

ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கோரனேவோவில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட துல்லியமான உக்ரைன் ஏவுகணைத் தாக்குதலில் குட்கோவ் கொல்லப்பட்டார். இதன் மூலம் உக்ரைனால் கொல்லப்பட்ட மிக உயர்ந்த இராணுவ அதிகாரிகளில் ஒருவராக இவர் உள்ளார் என்பதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

பிரிமோரி பிராந்திய ஆளுநர் ஒலெக் கோஷெம்யாகோ, குட்கோவ் மரணம் குறித்த செய்தியை தனது டெலிகிராம் பதிவில், “மிக்கைல் குட்கோவ், நரிமான் ஷிகாலியேவ் மற்றும் குர்ஸ்க் பிராந்தியத்தில் கொல்லப்பட்ட அனைத்து வீரர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக படைவீரர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எட்டு ஏவுகணைகளில் நான்கு ரஷ்ய வான் பாதுகாப்புப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மற்றவை இலக்கைத் தாக்கியுள்ளன.

இந்தத் தாக்குதல் ஒரு ‘முன்னணி கட்டளை மையத்தை’ தாக்கியது. அப்போது தளபதி மற்ற உயர் அதிகாரிகளுடன் சந்திப்பில் இருந்துள்ளார்.

தாக்குதல் நடந்த நேரத்தில் வெளியான தகவல்கள், “பல மூத்த அதிகாரிகள்” உட்பட பத்து பேர் இறந்ததாகத் தெரிவித்தன. பின்னர் வெளியான தகவல்கள் ஒரு டஜன் பேர் உயிரிழந்ததாகவும், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டின.