Posted in

அம்மா சீதையின் ஆசீர்வாதத்துடன்….. சாய் பல்லவியின் பதிவு வைரல்!

பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணா – தி இன்ட்ரோடக்‌ஷன்’ திரைப்படம், தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மருடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மானும் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்திலும், சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்திலும், யஷ் ராவணன் கதாபாத்திரத்திலும், ரவி தூபே லட்சுமணன் கதாபாத்திரத்திலும், சன்னி தியோல் ஹனுமான் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

சீதை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை சாய் பல்லவி, படப்பிடிப்பு குறித்து தனது X பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், “அம்மா சீதையின் ஆசீர்வாதத்துடன், ராமாயணக் காவியத்தை மீண்டும் உருவாக்கும் பணியில், தெய்வீகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து, அந்தப் பயணத்தை அனுபவிக்கிறேன்! இதுபோன்ற ஒரு நடிகர்கள் மற்றும் குழுவினருடன், நாம் அடைய முயற்சிக்கும் அற்புதத்தை நீங்கள் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சாய் பல்லவியின் இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.