வீரதீர சூரன் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில், சாந்தி டாக்கிஸ் நிறுவனத்தின் அருண் விஸ்வா தயாரிப்பில் ஒரு புதிய படம் உருவாக உள்ளதாக முன்னர் தகவல் வெளியானது. ஆனால், அண்மையில் அந்தப் படம் கைவிடப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.
மடோன் அஸ்வின் கூறிய கதை தயாரிப்பு நிறுவனத்திற்கும், விக்ரமிற்கும் பிடிக்காததாலேயே இந்தத் திட்டம் கைவிடப்பட்டதாகவும், இதனால் விக்ரம் வேறு படங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல்கள் பரவின.
இந்த நிலையில், அருண் விஸ்வா தயாரிப்பில் தற்போது சித்தார்த் நடித்த 3BHK திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் அருண் விஸ்வா திரையரங்கிற்குச் சென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
அங்கு அவர் அளித்த பேட்டியில், மடோன் அஸ்வின் – விக்ரம் இணையும் படம் கைவிடப்படவில்லை என்றும், இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பு தேதி விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், விக்ரமின் வீர தீர சூரன் பாகம் 2 வெளியான நிலையில், முதல் பாகமும் எடுக்க உள்ளனர் என்ற தகவலையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த அறிவிப்பு விக்ரம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.