Posted in

பாலஸ்தீன் ஆக்‌ஷன் அமைப்புக்கு பயங்கரவாத தடை

பிரிட்டிஷ் அரசாங்கம் ‘பாலஸ்தீன் ஆக்‌ஷன்’ (Palestine Action) அமைப்பை பயங்கரவாத தடுப்புச் சட்டங்களின் கீழ் தடை செய்யும் முடிவை நிறுத்திவைக்கக் கோரி அந்த அமைப்பின் இணை நிறுவனர் ஹுடா அம்மோரி தாக்கல் செய்த அவசர மேல்முறையீட்டு மனு வெள்ளிக்கிழமை நிராகரிக்கப்பட்டது. இதனால், இன்று நள்ளிரவு முதல் அந்த அமைப்பு பயங்கரவாத குழுவாக தடை செய்யப்பட உள்ளது.

2020 ஆம் ஆண்டில் பாலஸ்தீன் ஆக்‌ஷன் அமைப்பை நிறுவ உதவிய ஹுடா அம்மோரி, இந்த அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடை சட்டவிரோதமானது என்று கூறி, தனது வழக்கு முழுமையாக விசாரிக்கப்படுவதற்கு முன்னர், இந்த தடையை நிறுத்திவைக்க லண்டன் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த முடிவை எதிர்த்து வெள்ளிக்கிழமை இரவு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு செய்யப்பட்ட போதிலும், அதுவும் நிராகரிக்கப்பட்டது. இந்த தீர்ப்பின் விளைவாக, பாலஸ்தீன் ஆக்‌ஷன் அமைப்பில் உறுப்பினராக இருப்பதோ அல்லது அதற்கு ஆதரவளிப்பதோ ஒரு குற்றச்செயலாகக் கருதப்படும். இந்த குற்றத்திற்கு அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாரம் பாலஸ்தீன் ஆக்‌ஷன் அமைப்பை தடை செய்ய வாக்களித்தனர். இஸ்ரேலுக்கான பிரிட்டிஷ் ஆதரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மாதம் ராயல் விமானப்படை தளத்திற்குள் அத்துமீறி நுழைந்து இரண்டு விமானங்களை சேதப்படுத்தியதே இந்த தடைக்கான முக்கிய காரணம் என கூறப்படுகிறது.