இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, தற்போது தமிழ் திரையுலகில் புதிய இன்னிங்ஸைத் தொடங்குகிறார். நடிகராக அறிமுகமாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
டிரீம் நைட் ஸ்டோரிஸ் பிரைவேட் லிமிடெட் (டி.கே.எஸ்) சார்பில் டி. சரவணகுமார் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக சுரேஷ் ரெய்னா நடிக்கிறார். இந்தப் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும், இந்தப் படத்தை லோகன் எழுதி இயக்குகிறார்.
இது குறித்து சுரேஷ் ரெய்னா பேசுகையில், “தமிழ்நாட்டில்தான் விசில் போடு ஆர்மி இருக்கிறது. இங்கு நான் பல கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, உங்கள் அன்பையும் ஆதரவையும் பெற்றிருக்கிறேன். இப்போது தமிழ் சினிமாவில் நுழைவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் களத்தில் தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களைக் கவர்ந்த ரெய்னா, வெள்ளித்திரையில் எவ்வாறு தனது முத்திரையைப் பதிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்தப் படம் குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.