கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம ஆகிய பகுதிகளில் (ஜூலை 4) இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ், விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் கடற்படை ஆகிய பாதுகாப்புப் பிரிவுகள் இணைந்து மேற்கொண்ட இந்த ஒருங்கிணைந்த அதிரடி வேட்டை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களை நாட்டிலிருந்து அடியோடு ஒழிக்கும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் மற்றுமொரு அத்தியாயமாக அமைவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக இவ்வாறான சோதனை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஆதரவை வழங்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான விசேட தேடுதல் நடவடிக்கைகளை நாடு முழுவதும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.