தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர், பாடகர் மற்றும் ராக் ஸ்டார் எனப் புகழப்படும் அனிருத் ரவிச்சந்தரின் சென்னை இசை நிகழ்ச்சி புதிய சாதனையைப் படைத்துள்ளது. #Hukum என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய வெறும் 45 நிமிடங்களுக்குள்ளேயே அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளன. இது ஒரு இசையமைப்பாளரின் தனி இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் இவ்வளவு குறைந்த நேரத்தில், அதிவேகமாக விற்பனையாகி சாதனை படைத்திருப்பது இதுவே முதல்முறை என திரையிசை ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) உள்ள திருவிடந்தையில் வரும் ஜூலை 26 ஆம் தேதி அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உலக அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இவரது இசை நிகழ்ச்சிகள், மலேசியா, சிங்கப்பூர், துபாய், லண்டன் போன்ற நகரங்களில் ஏற்கனவே வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன.
இந்த அதிவேக டிக்கெட் விற்பனை, சென்னைவாசிகள் அனிருத் மீது வைத்துள்ள அளவு கடந்த அன்பையும், அவரது இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அவர்கள் கொண்டுள்ள உற்சாகத்தையும் வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. கூடுதல் டிக்கெட்டுகள் வழங்கப்பட வேண்டும் என சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி, சென்னை இசை ஆர்வலர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.