Posted in

மிலன் விமான நிலையத்தில் பெரும் சோகம்: ஜெட் எஞ்சினுக்குள் உறிஞ்சப்பட்ட மர்ம நபர்!

இத்தாலியின் மிலன் பெர்கமோ விமான நிலையத்தில் (மிலன் ஓரியோ அல் சீரியோ) நேற்று காலை பெரும் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு, 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் விமானத்தின் ஜெட் எஞ்சினுக்குள் உறிஞ்சப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த சில நிமிடங்களுக்கு முன், அவர் ஒரு காரில் ஆதாரங்களை விட்டுவிட்டு ஓடியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமான நிலையத்தின் டாக்ஸிவேயில் நடந்த இந்த சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து, பெர்கமோ விமான நிலையத்தில் அனைத்து விமானச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. வோலோட்டியா விமான நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ319 ரக விமானம் ஒன்று புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மீடியாவில் வெளியான தகவல்களின்படி, உயிரிழந்தவர் விமானப் பயணி அல்லது விமான நிலைய ஊழியர் அல்ல. அவர் ஒரு கட்டுமானத் தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு பாதுகாப்பு கதவை உடைத்துக்கொண்டு ஓடுதளத்திற்குள் நுழைந்து, விமானம் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தபோது, அதன் எஞ்சினை நோக்கி ஓடியுள்ளார். அவரைப் பிடிக்க விமான நிலைய காவல்துறை துரத்தியதாகவும், ஆனால் அவர்களைத் தட்டிக்கழித்துக்கொண்டு ஜெட் எஞ்சினுக்குள் சிக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் விமான நிலைய பாதுகாப்பில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒருவர் இவ்வளவு எளிதாக விமான நிலையத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் எப்படி நுழைய முடிந்தது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமானத்தில் இருந்த 154 பயணிகளும், 6 விமான ஊழியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தின் காரணமாக மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ரீதியான ஆதரவு வழங்கப்படும் என வோலோட்டியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்த முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.