இந்திய டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹரியானாவின் குருகிராம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான ராதிகா யாதவ், மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
அவரை அவரது தந்தையே துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்துள்ளதாக அந்நாட்டுக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ராதிகா யாதவின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், நடத்தப்பட்ட விசாரணைகளின் போது தந்தைக்கும் மகளுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த கொடூரக் கொலையில் முடிந்துள்ளமை தெரியவந்துள்ளது. ராதிகா யாதவ் சமீப காலமாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். அவரது தந்தைக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும், தந்தையின் சொல்லைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ரீல்ஸ் பதிவிட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ராதிகா யாதவுக்கும், அவரது தந்தைக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் கோபமடைந்த அவரது தந்தை, ராதிகா யாதவை நோக்கி 5 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த ராதிகா யாதவ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.