இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் கொண்டாட்ட நிகழ்வில் ஏற்பட்ட பெரும் நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்தத் துயரமான சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு, தங்களது விசாரண அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையிலான இந்த விசாரணை அறிக்கை, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல், பாதுகாப்பு ஏற்பாடுகள், மற்றும் பிற நிர்வாகக் குறைபாடுகள் குறித்து இந்த அறிக்கை ஆராய்ந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விபத்தில், 14 வயது சிறுவன் உட்பட 40 வயதுக்குட்பட்டவர்களே உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்சிபி அணியும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்திருந்தது. இந்த அறிக்கை வெளியீட்டைத் தொடர்ந்து, சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்பது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.