தமிழ் திரையுலகில் சர்ச்சைக்குப் பெயர்போன நடிகை வனிதா விஜயகுமார், இசைஞானி இளையராஜாவை கடுமையாக சாடி பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனிதா விஜயகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ (Mrs & Mr) திரைப்படத்தில், இளையராஜா இசையமைத்த ‘மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபலமான “சிவராத்திரி” பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகக் கூறி இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக வனிதா விஜயகுமார், இளையராஜாவின் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
“நான் இளையராஜா அப்பாவை நேரில் சென்று பார்த்து ஆசீர்வாதம் பெற்று, இந்த பாடல் விஷயத்தைச் சொன்னேன். அதற்கு அவரும் ‘ஓகே’ என்று பதிலளித்தார்,” என வனிதா தெரிவித்துள்ளார். அவ்வாறு அனுமதி பெற்ற பின்னரே பாடலை பயன்படுத்தியதாக அவர் வாதிடுகிறார்.
வனிதா மேலும் பேசுகையில், “நான் சின்ன வயதில் இருந்தே இளையராஜா சாரின் வீட்டில் வளர்ந்திருக்கிறேன். அவர் குடும்பத்திற்காக நான் நிறைய உழைத்துள்ளேன். அந்தக் குடும்பத்தில் நானும் ஒருத்தி, மருமகளாகப் போக வேண்டியவள் நான்,” எனக் கூறி, தனக்கும் இளையராஜா குடும்பத்திற்கும் இடையிலான நெருங்கிய உறவைச் சுட்டிக்காட்டினார்.
“ஒரு நிறுவனத்தில் நாம் வீடு வாங்கி பத்திரப்பதிவு செய்கிறோம், பிறகு அந்த பூமி எனக்கு சொந்தம் என ஒருவர் வந்து வழக்கு தொடர்ந்தால் அந்த வழக்கை அந்த நிறுவனத்தின் மீது தான் கேஸ் போட வேண்டும். இதேபோல ‘குட் பேட் அக்லி’, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ போன்ற பல படங்களுக்கும் இளையராஜா வழக்கு போட்டுள்ளார். அவர் காசு வாங்கிக்கொண்டு இசையமைத்த பாடல்களுக்கு இப்போது காப்புரிமை கோருவது சரியல்ல,” என வனிதா ஆவேசமாகப் பேசியுள்ளார்.
“இளையராஜா ஒரு லெஜெண்ட், கடவுள் மாதிரி. கடவுளே நம்மிடம் கோபப்பட்டால் என்ன செய்வது?” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசிய வனிதா, இளையராஜாவின் நடவடிக்கையால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்தச் சூழலில், இளையராஜா தரப்பில் தனது அனுமதியில்லாமல் பாடலை பயன்படுத்தியது காப்புரிமை மீறிய செயல் என்றும், உடனடியாக அந்தப் பாடலை திரைப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க இளையராஜா தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்த நிலையில், நீதிபதி வழக்கை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாகவே இளையராஜா தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு எதிராக வழக்குகள் தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.