இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கடுமையாக மீறப்பட்டுள்ளதாகக் காவல் துறை தலைமையகத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பாக நீதிமன்றத்தை நாட, முறைப்பாட்டாளர் தீர்மானித்துள்ளார்.
தனது முறைப்பாடு குறித்து காவல்துறையினர் இதுவரை உரிய பதில் வழங்காததால், வழக்கறிஞர் தனுக ரணஞ்சக கஹந்தகமகே, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனுவைத் தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரத்தை காவல்துறையினருக்கான இறுதி அவகாசமாக அவர் வழங்கியுள்ளார். அதற்குள் பதில் கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
வழக்கறிஞர் தனுக ரணஞ்சக கஹந்தகமகே கடந்த ஜூன் 13 ஆம் திகதி பதில் காவல்துறை மா அதிபரிடம், இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் மரணங்கள் தொடர்பான முறைப்பாட்டை சமர்ப்பித்தார். இந்த முறைப்பாடு மேலதிக நடவடிக்கைக்காக சட்டப்பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஏற்கனவே அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரணடைந்தவர்கள் சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டதாக முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இசைப்பிரியா எனப்படும் ஷோபா மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவங்கள் இதில் முக்கியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இசைப்பிரியா 2009 ஆம் ஆண்டு மே மாதம் உயிருடன், நிராயுதபாணியாகக் காவலில் இருந்ததாகவும், பின்னர் சந்தேகத்திற்கிடமான நிலையில் இறந்து கிடந்ததாகவும் காணொளி ஆதாரங்கள் காட்டுவதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காட்சிகளின் அடிப்படையில், அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, மரணதண்டனை பாணியில் கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 12 வயதுடைய பாலச்சந்திரன் உயிருடன் ஆயுதமேந்திய படையினர் வசமிருந்த புகைப்படங்களும், பின்னர் அவர் மார்பில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்படும் புகைப்படங்களும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இதுபோன்ற செயல்கள் நிரூபிக்கப்பட்டால், சர்வதேசச் சட்டத்தின் கீழ் அவை போர்க்குற்றங்களாகக் கருதப்படும் என்றும், ஜெனீவா உடன்படிக்கைகள் மற்றும் ரோம் சாசனம் ஆகிய இரண்டையும் மீறுவதாக இருப்பதாகவும் முறைப்பாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்கள் குறித்து இலங்கை காவல்துறையினர் உண்மை மற்றும் பொறுப்புடன், நியாயத்துக்கு வழிவகுக்கும் வகையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் தனுக ரணஞ்சக கஹந்தகமகே கோரியுள்ளார்.