நடிகர் விஜய் தொடங்கிய ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சி, தனது முதல் மாநில அளவிலான கண்டனப் போராட்டத்தை இன்று ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை சென்னை, சிவானந்தா சாலையில் நடத்தவுள்ளனர்.சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் காவல்துறையினரின் விசாரணையின் போது உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்தும், கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் நிகழ்ந்த “லாக்கப் டெத்” சம்பவங்களுக்கு நீதி கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சமீபத்தில் தமிழகத்தையே உலுக்கிய மடப்புரம் அஜித்குமார் மரணம் தொடர்பாக, பல்வேறு கட்சியினரும் கண்டனக் குரல் எழுப்பிய நிலையில், தமிழக வெற்றிக் கழகமும் களத்தில் இறங்க முடிவு செய்தது. ஆரம்பத்தில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு, காவல்துறை சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் நேரடியாக பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சி தொடங்கப்பட்ட பிறகு விஜய் பங்கேற்கும் முதல் அதிகாரப்பூர்வப் போராட்டம் இது என்பதால், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தமிழ்நாடு முழுவதிலுமிருந்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஏற்கனவே சென்னை வந்துள்ளதாகவும், சுமார் 15,000 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டத்திற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மேற்கொண்டு வருகிறார். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றி, அமைதியான முறையில் போராட்டத்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை கட்சி வெளியிட்டுள்ளது. மேலும், காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்படவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம், தமிழகத்தில் அதிகரிக்கும் “லாக்கப் டெத்” சம்பவங்களுக்கு நீதி கேட்டு, தமிழக அரசு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பதையும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதையும் வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போராட்டம் தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் களப் பணிகளை மேலும் அதிகரிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.