வங்கதேசத்தில் பயங்கரம்: பாடசாலை மீது விழுந்த விமானம்… 18 பேர் உடல் கருகி பலி!

வங்கதேசத்தில் பயங்கரம்: பாடசாலை மீது விழுந்த விமானம்… 18 பேர் உடல் கருகி பலி!

வங்கதேச தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பாடசாலை மற்றும் கல்லூரி வளாகத்தின் மீது வங்கதேச விமானப் படையின் பயிற்சி விமானம் ஒன்று மோதியதில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நேற்று  மதியம் 1:06 மணியளவில், F-7 BGI ரக பயிற்சி விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பள்ளி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்து நடந்தபோது பாடசாலையில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன.

விபத்தில் உயிரிழந்தவர்களில் 16 பேர் மாணவர்கள் என்றும், விமானி முகமது டூகிர் இஸ்லாம் மற்றும் இரண்டு ஆசிரியர்களும் அடங்குவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் மோதியவுடன் பெரும் சத்தத்துடன் தீப்பிடித்ததாகவும், இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூடியதாகவும் சம்பவ இடத்திலிருந்தவர்கள் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்புப் படைகள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் விமானப் படை ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டன.

வங்கதேச பாதுகாப்பு அமைச்சகம் இந்த விபத்து குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விபத்தால் ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்றும், இது தேசத்துக்கு ஆழ்ந்த வேதனையான தருணம் என்றும் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனைகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.