இந்தோனேசியாவில் உள்ள லெவோடோபி எரிமலை மீண்டும் வெடித்துள்ளது. இந்த எரிமலை வெடிப்பு காரணமாக சாம்பல் மேகங்கள் பல மைல் தூரத்திற்குப் பரவியுள்ளன.
இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள ஃப்ளோர்ஸ் தீவில் அமைந்துள்ள லெவோடோபி எரிமலை (Mount Lewotobi Laki-laki), கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வெடித்து வருகிறது.
நேற்றையதினம் அதிகாலை ஏற்பட்ட வெடிப்பில், 18 கிலோமீட்டர் (11 மைல்) உயரத்திற்கு சாம்பல் மற்றும் எரிமலைப் பொருட்கள் வானில் பரவின.
கடந்த வெள்ளிக்கிழமை மாலையிலும் ஒரு வெடிப்பு ஏற்பட்டது. அப்போது, எரிமலைப் பொருட்கள் 10 கிலோமீட்டர் உயரம் வரை சென்றன.
இந்த வெடிப்புகளால், அருகில் உள்ள கிராமங்கள் சாம்பல் படலத்தால் மூடப்பட்டுள்ளன.
அதிகாரிகள் அதிகபட்ச எச்சரிக்கை நிலையை அறிவித்து, எரிமலையைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றி வருகின்றனர்.
நவம்பர் மாதத்தில் இதே எரிமலை வெடித்ததில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு, அதிகாரிகள் பல ஆயிரம் பேரை நிரந்தரமாக வேறு இடங்களுக்கு மாற்றியுள்ளனர்.
இந்தோனேசியா, உலகின் “பசிபிக் நெருப்பு வளையத்தில்” (Pacific Ring of Fire) அமைந்துள்ளது. இங்கு 120-க்கும் மேற்பட்ட செயல்படும் எரிமலைகள் உள்ளன. எனவே, அடிக்கடி நிலநடுக்கங்களும், எரிமலை வெடிப்புகளும் ஏற்படுவது வழக்கம்.