ராஜ்கிரனிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் லோகேஷ்: சரமாரியாக சாடிய மூத்த பத்திரிகையாளர்

 ராஜ்கிரனிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் லோகேஷ்: சரமாரியாக சாடிய மூத்த பத்திரிகையாளர்

‘கூலி’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ராஜ்கிரனிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்: மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் காட்டம்

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படமான ‘கூலி’, ‘வேட்டையன்’ படத்திற்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுவரை தோல்விப் படங்களைக் கொடுக்காத இயக்குநர் லோகேஷ் கனகராஜும், ரஜினியும் இணைவதால், இந்தப் படத்திற்குத் தனி எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், ‘கூலி’ படத்தின் முதல் பார்வை நேற்று வெளியாகி ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. பலரும், லோகேஷ் கனகராஜின் கதைக்களங்கள் பழையதாகிவிட்டதாகவும், ஒரே ஃபார்முலாவைப் பயன்படுத்தி எல்லாப் படங்களையும் வெற்றி பெறச் செய்ய முடியாது என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மூத்த பத்திரிகையாளரும் சினிமா விமர்சகருமான வலைப்பேச்சு அந்தணன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீது சரமாரியான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

“லோகேஷிடம் 24 உதவி இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் கடைசி நிலையில் உள்ள உதவி இயக்குநர் கூட லோகேஷுடன் நேரடியாகப் பேச முடியாது. அவருக்கு முந்தைய நிலையில் இருப்பவர்களிடம் சொன்னால்தான் அந்தத் தகவல் லோகேஷின் காதுகளுக்குச் செல்லும். அது எப்படிச் செல்கிறது என்பதுகூட தெரியாது. இப்படித்தான் அவர் கீழ் பணிபுரிபவர்கள் வேலை செய்கிறார்கள். இதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம்.”

“நடிகர் ராஜ்கிரன் ஆரம்ப நாட்களில் தானே தயாரித்து, இயக்கி, நடித்த படங்கள் பல வருடங்கள் வெற்றிகரமாக ஓடின. அப்போது ரஜினி வாங்கிய சம்பளத்திற்கு இணையான தொகையை அவரும் பெற்றார். குறுகிய காலத்தில் இவ்வளவு வெற்றிகளை அவரால் எப்படி அடைய முடிந்தது என்று ஆராய்ந்தபோது ஒரு விஷயம் தெரிய வந்தது.”

“அவர் ஒரு படத்தை முழுமையாக எடுத்து முடித்தவுடன், யூனிட்டில் உள்ள கடைசி நிலையில் இருக்கும் பணியாளர் முதல், முதல் நிலைத் தொழில்நுட்பக் கலைஞர்களான ஒளிப்பதிவாளர் வரை எல்லோரையும் வரவழைத்து, தான் இயக்கிய படத்தை அவர்களுக்குப் போட்டுக் காட்டுவார். நாம் சொல்லும் கருத்து இயக்குநருக்கு சங்கடத்தை ஏற்படுத்துமோ என்று யோசிப்பது மனிதர்களின் இயல்பு. இதனால், ராஜ்கிரன் ஒரு யோசனை செய்தார்.”

“படம் பார்க்க வரும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் காகிதமும் பேனாவும் கொடுத்து, படம் முடிந்தவுடன் அதைப் பற்றிய கருத்துக்களை அதில் எழுதச் சொல்வார். அது பாராட்டாக இருந்தாலும் சரி, விமர்சனமாக இருந்தாலும் சரி, எல்லோரும் கட்டாயம் எழுத வேண்டும். அனைவரிடம் இருந்தும் அந்தப் பேப்பர்களைப் பெற்று, அவர்கள் சென்ற பிறகு ஒவ்வொன்றாகப் படித்து, படத்தில் ஏதேனும் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தால் அவற்றைச் சரிசெய்து கொள்வார். இதுவே அவரது வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.”

“இன்றைய இயக்குநர்கள் பலரும் தாங்கள் எடுத்த படத்தை யாருக்கும் காட்ட விரும்புவதில்லை. சிலர் தயாரிப்பாளர்களுக்கே கூட படத்தைப் போட்டுக் காட்ட மாட்டார்கள். படத்தின் தோல்விக்கு இதுதான் பாதி காரணம்” என்று வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார்.