வரலாற்றில் அதிவேகமாக பதவியை இழந்த பயிற்சியாளர் டென் ஹாக்!

வரலாற்றில் அதிவேகமாக பதவியை இழந்த பயிற்சியாளர் டென் ஹாக்!

முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளரான எரிக் டென் ஹாக், ஜெர்மனியின் பேயர் லெவர்குசன் கால்பந்து கிளப் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். வெறும் இரண்டு பன்டஸ்லிகா (Bundesliga) போட்டிகளில் மட்டுமே அவர் இந்தப் பதவியில் இருந்துள்ளார். இந்த நீக்கம், பன்டஸ்லிகா வரலாற்றில் ஒரு பயிற்சியாளர் இவ்வளவு விரைவாக நீக்கப்படுவது இதுவே முதல் முறை என்ற விரும்பத்தகாத சாதனையை ஏற்படுத்தியுள்ளது.

டென் ஹாக் பயிற்சியாளர் ஆன பிறகு, பேயர் லெவர்குசன் அணி, பன்டஸ்லிகாவின் முதல் போட்டியில் ஹொஃபென்ஹெய்ம் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

தொடர்ந்து, வெர்டெர் ப்ரேமன் அணிக்கு எதிரான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தும், அந்த அணி பத்து வீரர்களுடன் மட்டுமே விளையாடிய நிலையிலும், பேயர் லெவர்குசன் அணி கோல் அடித்து வெற்றியை கோட்டைவிட்டு, 3-3 என டிரா செய்தது. இந்த ஆட்டம் டென் ஹாகின் பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்தியது.

இந்த டிராவுக்குப் பிறகு டென் ஹாக், தனது வீரர்கள் சரியான உடல் தகுதியுடன் இல்லை என்றும், அவர்கள் முழுப் பொறுப்புடன் விளையாடவில்லை என்றும் கடுமையாக விமர்சித்தார். “வீரர்கள் களத்தில் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஓடினர், ஒரு குழுவாக விளையாடவே இல்லை,” என்று அவர் கூறினார்.

கடந்த அக்டோபர் 2024-ல் மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து நீக்கப்பட்ட டென் ஹாக், வெறும் 62 நாட்கள் மட்டுமே பேயர் லெவர்குசன் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

பேயர் லெவர்குசனின் விளையாட்டு இயக்குநர் சைமன் ரோல்ஃபெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த முடிவு எங்களுக்கு எளிதானது அல்ல. ஆனால் கடந்த சில வாரங்கள், இந்த அமைப்பில் ஒரு புதிய மற்றும் வெற்றிகரமான அணியை உருவாக்குவது சாத்தியமில்லை என்பதைக் காட்டின. எங்கள் அணியின் தரத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஒரு புதிய பயிற்சியாளருடன், நாங்கள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்ல முயற்சி செய்வோம்,” என்று தெரிவித்துள்ளார்.

டென் ஹாக்-கின் எதிர்காலம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. பேயர் லெவர்குசன் அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்கும் வரை, உதவிப் பயிற்சியாளர்கள் பொறுப்பேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.