யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து கால் மடித்து அடக்கம் செய்யப்பட்ட நிலையில் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த எலும்புக்கூடு சைவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளதாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
பொதுவாக, இறந்தவர்கள் அடக்கம் செய்யப்படும்போது கால்கள் நேராக நீட்டப்பட்டு அடக்கம் செய்யப்படுவார்கள். ஆனால், இந்த எலும்புக்கூடு கால் மடித்து அடக்கம் செய்யப்பட்டிருப்பது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இது, சமயச் சடங்குகளின்படி அடக்கம் செய்யப்பட்டதா அல்லது வன்முறை காரணமாக இப்படி அடக்கம் செய்யப்பட்டதா என்பது குறித்து விரிவான விசாரணை தேவை என்று மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
கட்டம் கட்டமாக இதுவரை 53 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில், நேற்று கண்டெடுக்கப்பட்ட 17 எலும்புக்கூடுகளுடன் சேர்த்து மொத்தம் 235 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும், 240 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நீதிமன்றம் அளித்த 45 நாள் கால அவகாசம் இன்று நிறைவடைய உள்ள நிலையில், அகழ்வுப் பணிகள் மேலும் தொடருமா என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.