சர்வதேச அரங்கில் இந்திய சினிமாவை உயர்த்தும் அஜித்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

சர்வதேச அரங்கில் இந்திய சினிமாவை உயர்த்தும் அஜித்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித்குமார், தனது ரேஸ் கார் மற்றும் பந்தய உடைகளில் இந்திய சினிமாத் துறையை பிரதிபலிக்கும் வகையில், ‘இந்திய சினிமா’ லோகோவை அச்சிடப் போவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அஜித்குமார், நடிப்பு மட்டுமல்லாமல் கார் மற்றும் பைக் பந்தயங்களிலும் ஆர்வம் கொண்டவர். ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பின் போதே உடலைக் குறைத்த அவர், ‘குட் பேட் அக்லி’ படத்துக்காக மேலும் ஃபிட்னஸ் மீது கவனம் செலுத்தினார். அதன் பிறகு கார் பந்தயங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் துபாயில் நடந்த கார் பந்தயத்தில் அஜித்தின் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து போர்ச்சுகல் மற்றும் ஜெர்மனியில் நடைபெற்ற பந்தயங்களிலும் அவர் பங்கேற்றார்.

ஜெர்மனியில் நடந்த பந்தயத்தில் அஜித்குமார், இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்கும் விதமாக ஒரு முக்கியமான கருத்தை தெரிவித்தார். “என்னை பிரபலப்படுத்த வேண்டாம். இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர்களுக்கு ஆதரவு கொடுங்கள். அவர்கள் உடல் மற்றும் மன ரீதியாக நிறைய சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். அவர்களின் கடின உழைப்பு பலருக்கும் தெரிவதில்லை. ஒருநாள் இந்திய வீரர்கள் ஃபார்முலா ஒன் உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வெல்வார்கள்” என்று கூறினார். கார் பந்தயம் என்பது வெறும் வேடிக்கையான போட்டி அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

அஜித்குமார் அக்டோபர் மாதம் முதல் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த உள்ளார். ‘குட் பேட் அக்லி’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், அஜித்குமார் தனது பந்தய காரிலும், உடைகளிலும் ‘இந்திய சினிமா’ லோகோவை அச்சிட முடிவு செய்து, இந்திய சினிமாவை உலக அரங்கில் கௌரவிக்கும் வகையில் ஒரு சிறப்பான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அஜித்தின் இந்தச் செயல், அவரது ரசிகர்களால் மட்டுமல்லாமல், பல முன்னணி பிரபலங்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.