தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது முதல் அரசியல் பிரச்சாரத்தை இன்று திருச்சியில் தொடங்கினார். பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால், திருச்சி நகரமே ஸ்தம்பித்தது. நேற்றைய தினம் காலை 10.30 மணிக்குத் தொடங்க வேண்டிய கூட்டம், தொண்டர்களின் வெள்ளத்தால் மதியம் 2.30 மணிக்கு மேல் தான் தொடங்கியது.
மக்களின் வெள்ளம்
விஜய்யின் பிரச்சார வாகனத்தை திருச்சி விமான நிலையம் முதல் மரக்கடை எம்ஜிஆர் சிலை வரை ஏராளமான தொண்டர்கள் சூழ்ந்திருந்தனர். குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள், பெரியவர்கள் வர வேண்டாம் என கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், மக்கள் அலைகடலென திரண்டிருந்தனர். இதனால், விஜய்யின் வாகன அணிவகுப்பு மிகவும் மெதுவாகவே நகர முடிந்தது.
ஜெயலலிதா பாணியில் கேள்வி
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, தனது பிரச்சார உரையைத் தொடங்கிய விஜய், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு, அவை நிறைவேற்றப்படாததைக் குறிப்பிட்டு, “செய்தீர்களா?” என ஜெயலலிதா பாணியில் முழங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அப்போது அவர், “திமுக அரசு திருச்சியில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க என்ன செய்தது? மணல் கொள்ளையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. ஸ்ரீரங்கத்தில் மல்லிகைப் பூ விளைச்சல் அதிகமாக இருந்தும், ஏன் அங்கு வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கவில்லை? இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை” என்று ஆவேசமாகப் பேசினார்.
விஜய்யின் இந்தக் கேள்வி, தமிழக அரசியலில் ஒரு புதிய விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ளது.