இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை விவகாரத்தில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணாவுக்கு தொடர்பிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் இருந்த நிலையில், இப்போது புதிய மற்றும் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
ரவிராஜை கொலை செய்வதற்கு, கருணாவுக்கு 50 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாக ஒரு புலனாய்வாளர் கூறியதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்த தொகை யார் மூலம் வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் தொடர்பிருக்கலாம் என முன்பு கூறப்பட்டது.
இந்தக் கொலை குறித்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த மர்மமான கொலைக்குப் பின்னால் உள்ள உண்மைகளையும், பெரும் புள்ளிகளையும் வெளிக்கொண்டு வரும் முயற்சியில், எமது செய்திகளுக்கு அப்பால் என்ற நிகழ்ச்சி விரிவான ஆய்வை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் ஒளிந்துள்ள பல ரகசியங்கள் விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.